நாக்பூர்: வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த மிரட்டலை அடுத்து, இண்டிகோ விமானம் வேறிடத்திற்குத் திருப்பிவிடப்பட்டது.
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 1) காலை தெலுங்கானாவின் ஹைதராபாத் நகருக்கு இண்டிகோ விமானம் (6E-7308) புறப்பட்டது.
விமானம் புறப்பட்டபின் வெடிகுண்டு மிரட்டல் குறித்துத் தெரியவந்தது. அதனால், அவ்விமானம் மகாராஷ்டிராவின் நாக்பூர் நகருக்குத் திருப்பிவிடப்பட்டது.
“விமானம் தரையிறங்கியதும் எல்லாப் பயணிகளும் இறக்கிவிடப்பட்டு, கட்டாயப் பாதுகாப்புச் சோதனை நடத்தப்பட்டது. பயணிகளுக்குத் தேவையான உதவிகளும் சிற்றுண்டியும் வழங்கப்பட்டன,” என்று இண்டிகோ வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக ஒரு சிறுதாளில் எழுதப்பட்டு, விமானத்தின் கழிவறையில் போடப்பட்டிருந்ததாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆயினும், சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.
இதனையடுத்து, பிற்பகல் 2 மணிக்கு அவ்விமானம் மீண்டும் ஹைதராபாத்திற்குக் கிளம்பும் என எதிர்பார்க்கப்படுவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.