பல ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பல ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

2 mins read
605bf2d1-f9dc-4afa-8873-897896a5699c
வெடிகுண்டு  மிரட்டல்களைத் தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவை போலியான மிரட்டல்கள் என்று தெரியவந்தது. - படம்: இந்திய ஊடகம்

திருப்பதி: இந்தியாவில் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து தற்போது ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கோல்கத்தா, திருப்பதி, ராஜ்கோட், லக்னோ உள்ளிட்ட நகரங்களில் செயல்படும் 30க்கும் மேற்பட்ட ஹோட்டல்களுக்கு சனிக்கிழமையன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

தீபாவளி முதலிய பண்டிகைகள் நெருங்கி வரும் நேரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக விமானங்களுக்கு கொடுக்கப்பட்ட மிரட்டல்களால் விமான நிலையங்களில் கடுமையான சோதனைகள் இடம்பெற்றுவருகின்றன.

கோல்கத்தாவில் குறைந்தது 10 பிரபலமான ‘ஸ்டார்” ஹோட்டல்களுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்தது. உள்துறை அமைச்சர் கோல்கத்தா வந்த நேரத்தில் அவை அனுப்பப்பட்டன.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவை போலியான மிரட்டல்கள் என்று தெரியவந்தது.

திருப்பதியிலும் நான்கு ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. கடந்த சில நாள்களாகவே திருப்பதி ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

குஜராத்தில் உள்ள ராஜ்கோட் நகரில் உள்ள 10 ஹோட்டல்களுக்கு ‘Kan Din’ என்ற மின்னஞ்சல் பெயரில் மிரட்டல் வந்தது.

ரூ 50 லட்சம் கேட்டு மிரட்டல்

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) காலை லக்னோவில் உள்ள 9 பிரபலமான ஹோட்டல்களுக்கு மிரட்டல் வந்தது. மேலும் அந்த ஹோட்டல்களிடம் 50 லட்சம் ரூபாய் கேட்டு அந்த மிரட்டல் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மிரட்டல் விடுக்கப்பட்ட ஹோட்டல்கள் லக்னோ நகரின் முக்கிய இடங்களான கோமதி நகர், சரோஜினி நகர், ஹஸ்ரத்கன்ஜ், அலம்பாக் சாரகாவில் இருப்பவை.

மிரட்டல் வந்த அடுத்த நிமிடமே அனைத்துவிதமான சோதனைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக லக்னோ காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
விமானப் போக்குவரத்துமிரட்டல்வெடிகுண்டு