புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
டெல்லியின் சாணக்கியபுரி பகுதியில் ‘வைகை’, ‘பொதிகை’ என இரு வளாகங்களில் தமிழ்நாடு இல்லம் உள்ளது. வைகை இல்லத்தில் 49 அறைகளும் பொதிகை இல்லத்தில் 73 அறைகளும் இருக்கின்றன.
இந்நிலையில், சனிக்கிழமை (மார்ச் 1) காலை ‘பொதிகை’ இல்லத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உள்ளிட்ட விருந்தினர்கள், ஊழியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற வெடிகுண்டுச் செயலிழப்பு நிபுணர்களும் காவல்துறையினரும் சோதனை மேற்கொண்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு அவசர மருத்துவ வாகனங்களும் தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.
மிரட்டல் விடுத்தவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

