அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரிலுள்ள பத்துத் தொடக்கப் பள்ளிகளுக்குப் புதன்கிழமை (அக்டோபர் 7) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, அந்தப் பள்ளிகளில் வெடிகுண்டுச் சோதனை நடத்தப்பட்டது. வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் மிரட்டல்கள் வெறும் புரளி என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
‘காலிஸ்தான் தேசிய ராணுவம்’ என்ற பெயரில் மின்னஞ்சல் வழியாக அந்த மிரட்டல் அனுப்பப்பட்டது. நவம்பர் 1ஆம் தேதி டெல்லி ஜவகர்லால் நேரு விளையாட்டரங்கிலும் நவம்பர் 21ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கிலும் குண்டு வெடிக்கும் என அம்மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்ததாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அவ்விரு நாள்களிலும் பாடகர் தில்ஜித் தோசன்ஜியின் இசை நிகழ்ச்சி அந்த அரங்குகளில் நடைபெறவுள்ளது. அந்த இசை நிகழ்ச்சிக்குச் செல்வோர்க்கும் அந்த மின்னஞ்சலில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது.
வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, வெடிகுண்டுச் செயலிழப்புக் குழு, மோப்ப நாய்கள், நாசவேலை முறியடிப்புக் குழு ஆகியவற்றுடன் காவல்துறை அப்பள்ளிகளுக்கு விரைந்து சென்று முழுமையாகச் சோதனை நடத்தியது. சந்தேகப்படும்படியாக அங்கு எதுவும் சிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக அகமதாபாத்தில் உள்ள பள்ளிகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட பல இடங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாகக் காவல்துறைத் துணை ஆணையர் சிவம் வர்மா கூறினார்.
