சண்டிகர்: இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் சண்டிகரிலும் மொகாலியிலும் உள்ள பத்துப் பள்ளிகளுக்குச் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) தொலைபேசி வழியாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்கள் முன்னதாகவே வீடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர். சம்பந்தப்பட்ட பள்ளிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பாதுகாப்புச் சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
பாதுகாப்புப் பிரச்சினை காரணமாக வகுப்புகள் இடையிலேயே நிறுத்தப்படுவதாகப் பாதிக்கப்பட்ட பள்ளிகள் மாணவர்களின் பெற்றோர்களுக்கு அவசரச் செய்திகளை அனுப்பின.
பள்ளிப் பேருந்துகள் ஏற்கெனவே கிளம்பிவிட்டன என்றும் குறிப்பிட்ட நிறுத்தங்களுக்கு வந்து தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகளைத் தொடர்ந்து உள்ளூர்க் காவல்துறையினருக்கும் அவசரகாலப் படையினருக்கும் தகவல் அனுப்பப்பட்டு, விழிப்புநிலையில் வைக்கப்பட்டனர்.
முன்னதாக, டெல்லியிலுள்ள பல பள்ளிகளுக்கும் திங்கட்கிழமையன்று மின்னஞ்சல்வழி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர், வெடிகுண்டுச் செயலிழப்புக் குழுவினர், மோப்ப நாய்ப் பிரிவினர், தீயணைப்புத் துறையினர், மருத்துவச் சேவைக் குழுவினர் ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கடந்த 2025ஆம் ஆண்டில் இப்படி வந்த மிரட்டல்கள் பெரும்பாலும் புரளிகளாகவே இருந்தன என்றும் இருந்தாலும் ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்றும் டெல்லி பள்ளி முதல்வர்கள் தெரிவித்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி கூறியது.
சென்ற ஆண்டு அக்டோபரில் மட்டும் ஒரே நாளில் டெல்லியில் 200க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மின்னஞ்சல்வழி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. 2024ல் அத்தகைய 500 மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

