திருமலை: திருப்பதியில் உள்ள பிரபலமான இஸ்கான் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாள்களாக விமானங்கள், விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிரபல ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்த மிரட்டலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அது புரளி என்பது தெரியவந்தது.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்த விவகாரத்தில் சமூக வலைத் தளங்களுக்கு மத்திய அரசு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த நிலையில், திருப்பதியில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை கோவிலின் மின் அஞ்சல் முகவரிக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் கோவிலை தகர்ப்பார்கள் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனால், பதறியடித்துக்கொண்டு கோவில் நிர்வாகிகள், காவல்துறைக்கும் வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் கோவில் மூலைமுடுக்குகளில் எல்லாம் தீவிர சோதனை நடத்தினர். எந்த வெடிபொருள்களும் கைப்பற்றப்படாத நிலையில், கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வெடிகுண்டு மிரட்டல் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கெனவே, கடந்த 26ஆம் தேதி திருப்பதியில் உள்ள பிரபலமான இரண்டு ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் அது வதந்தி என்பது தெரிய வந்தது.