கோல்கத்தா: அண்மையில் கோல்கத்தா நகரில் மேக வெடிப்பால் கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள கல்லூரி சாலையில் இருந்த மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் நாசமாகிவிட்டன.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கோல்கத்தாவில் அண்மையில் கனமழை பெய்தது. ஒரே நாளில் 25 சென்டி மீட்டர் அளவுக்குப் பெய்த மழையால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போனது.
இடைவிடாமல் பெய்த மழையால் ஏராளமான வீடுகள், கடைகள் சேதமடைந்தன. நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்நிலையில், கோல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற கல்லூரி தெரு (காலேஜ் ஸ்திரீட்) உள்ள பகுதியும் பெரும் சேதங்களை எதிர்கொண்டது. இது பழைய புத்தகங்களை விற்கும் சந்தையாகும்.
தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இங்கு வந்து புத்தகங்களை வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், கனமழையால் இந்தச் சந்தையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் மழைநீரில் மூழ்கி நாசமாகின. இதனால் ஏற்பட்டுள்ள பெரும் இழப்பால் புத்தகப் பதிப்பகத்தாரும் வியாபாரிகளும் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.
வெள்ளத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் நாசமாகியிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பல கடைகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அனைத்துப் புத்தகங்களுமே சேதமாகிவிட்டன.
மழை, வெள்ளப்பெருக்கு குறித்து முன்கூட்டியே எந்தத் தகவலும் வெளியாகவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் வியாபாரிகள், இதன் காரணமாக கடைக்கு உள்ளே, வெளியே தரையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் அனைத்தும் நீரில் நனைந்துவிட்டதாகப் புலம்புகின்றனர்.