புதுடெல்லி: இந்தியாவில் பயண கார்களின் விற்பனை ஜூலை மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு கார் விற்பனை 33 விழுக்காடு அதிகரித்துள்ளது.
2025 ஜூலையில் ஏறத்தாழ 3.5 லட்சம் கார்கள் விற்கப்பட்ட நிலையில் இந்த ஜூலையில் அதன் எண்ணிக்கை 4.65 லட்சம் முதல் 4.7 லட்சம் வரை அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி 2.0, குறைந்த ரெப்போ விகிதங்கள், ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கும் தனிநபர்களுக்கான வருமான வரி நிவாரணம் போன்றவற்றால் கார்களுக்கான தேவை அதிகரித்தது.
அதன் காரணமாக, இந்தியாவின் பயணிகள் வாகனச் சந்தை இதுவரை இல்லாத அளவுக்கு வலுவான ஜூலை மாத செயல்திறனைப் பதிவு செய்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
“அடிப்படையில், இந்த மூன்று சாதகமான காரணிகளும் வலுவாக உள்ளன,” என்று மாருதி சுசுகி இந்தியாவின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவின் மூத்த செயல் அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மாருதி சுசுகி நிறுவனம் ஜூலை மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 1,96,203 உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனையைப் பதிவு செய்து சந்தையில் முன்னிலை வகித்தது.
கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1,37,776 வாகனங்கள் விற்பனையான நிலையில், இது 43.4 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இரண்டாம் இடத்தில் உள்ள டாடா நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி 55.3 விழுக்காடு அதிகரித்ததன் காரணமாக 61,356 கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
அதேபோல, ஹுயுண்டாய் மோட்டார் நிறுவனமும் இந்தியாவில் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை இல்லாத அளவுக்கு மிகச் சிறந்த உள்நாட்டு மாதாந்தர விற்பனையை எட்டியுள்ளது.
ஜூலை மாதம் அது 54,210 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 23.3 விழுக்காடு அதிகம்.

