புதுடெல்லி: இந்திய ஆண்களைத் திருமணம் செய்துகொள்ள நிச்சயிக்கப்பட்ட ஏறக்குறைய 150 பாகிஸ்தானிய மணப்பெண்கள், மூன்றாம் நாடுகள் வழியாக இந்தியா சென்றடைந்தனர்.
இதனால், பல மாதங்களாகத் தேங்கி நின்ற திருமண நிகழ்வுகள் நடைபெற வழி பிறந்துள்ளது.
விசா கட்டுப்பாடுகள் காரணமாக அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டது. அதனால், திட்டமிட்டபடி அவர்களின் திருமணங்களை நடத்துவதில் சிக்கல் நிலவியது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். அதற்குப் பதிலடியாக இந்தியா ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை மேற்கொண்டது.
அதன் காரணமாக, வாகா-அட்டாரி எல்லைப் பாதை மூடப்பட்டதுடன், இந்தியா செல்லத் திட்டமிட்டவர்களின் விசா விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால், இந்திய மணமகன்களை மணமுடிக்கவிருந்த பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தைச் சேர்ந்த பல பெண்களின் திருமணங்கள் முடங்கிப்போயின.
இதனையடுத்து, சிந்து சமூகப் பேராளர்களும் பாகிஸ்தானின் சிந்து மாநிலம், கோட்கியில் அமைந்த புகழ்பெற்ற ஷதானி தர்பார் என்ற இந்து சமயப் புனிதத் தலத்தின் ஆன்மிகத் தலைவருமான சாந்த் யுதிஷ்டிர்லால் ஷதானியும் இணைந்து செயல்பட்டனர்.
இந்தியாவில் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்த 150 மணப்பெண்களின் விவரங்களை அந்தச் சமய அமைப்பு திரட்டியது. பின்னர் இந்திய உள்துறை அமைச்சை அணுகி, அந்தப் பெண்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் விசா வசதி செய்து தருமாறு கோரிக்கை விடுத்தது.
அவர்களின் கோரிக்கையைப் பரிசீலித்த இந்திய அரசு, அட்டாரி எல்லைப் பாதைக்கு பதிலாக வான்வழியாக மட்டுமே இந்தியாவிற்குள் நுழைய அவர்களுக்கு அனுமதி அளித்தது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதல் மணப்பெண்களும் அவர்களின் உறவினர்களும் துபாய், ஓமான், இலங்கை, பங்ளாதேஷ் போன்ற நாடுகள் வழியாகப் பயணம் செய்து, இந்தியாவைச் சென்றடைந்தனர்.
தற்போது நாக்பூர், ராய்ப்பூர், ஜோத்பூர், புனே ஆகிய இந்திய நகரங்களில் அத்திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. அவற்றில், மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த 15 திருமணங்களும் அடங்கும் என்று அந்நகரைச் சேர்ந்த சமூகத் தலைவர் ராஜேஷ் ஜாம்பியா தெரிவித்தார்.
நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு அந்தத் திருமணங்கள் நடைபெறுவதால் குடும்பத்தினர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் 300 பெண்கள் காத்திருப்பு
இதனிடையே, இந்திய ஆண்களை மணக்க மேலும் கிட்டத்தட்ட 300 பாகிஸ்தானியப் பெண்கள் தங்களது நாட்டில் காத்திருப்பதாகத் திரு ஜாம்பியா கூறியுள்ளார்.
அதனால், அந்தப் பெண்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் உடனடியாக விசா வழங்கி உதவ வேண்டும் என்று இந்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


