வேலைக்கும் சொந்த வாழ்க்கைக்கும் சரிசமமாக நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பதற்காக ஓர் ஊழியரின் வேலைப்பளுவை மட்டும் குறைக்காமல் அவரின் சம்பளத்தையும் குறைத்துள்ளது நிறுவனம் ஒன்று.
ஒருசில நிறுவனங்கள் பொதுவாக இந்தச் சமநிலையைத் தருவதாகக் கூறிவிட்டு தொடர்ந்து எந்தவொரு நடவடிக்கையையும் எடுப்பதில்லை. ஆனால், ஒரு நிறுவனம் விசித்திரமான ஓர் அணுகுமுறையைக் கையாண்டுள்ளது.
குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் மேலும் அதிக நேரத்தை ஊழியர்கள் ஒதுக்க முடியும் என்று கூறிய நிறுவனம், அவர்களின் பொறுப்புகளைக் குறைத்துக்கொண்டது.
பொறுப்புகளைக் குறைத்துவிட்டோம், அடுத்து என்ன? செய்யும் வேலைக்கு ஏற்ப சம்பளத்தையும் குறைத்துவிடுவோம் என்று நிறுவனம் தீர்மானித்தது.
இந்த முடிவைத் தெரிவிக்கும் மின்னஞ்சல் ஒன்று, ரெடிட் தளத்தில் பகிரப்பட்டது.
“யே! குடும்பம், நண்பர்களுடன் கூடுதல் நேரம்! உங்களின் பொறுப்புகளை நாங்கள் மாற்றுகிறோம். அப்போதுதான் நீங்கள் சமாளிக்கும் வேலைகள் குறையும். உங்களின் பதவி அப்படியே இருந்தாலும், வேலைகள் குறைவதால் அதற்கேற்ப உங்களின் சம்பளம் மாற்றிக் கணக்கிடப்படும்,” என்று புதுடெல்லியில் உள்ள அந்த நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு அனுப்பிய மின்னஞ்சல் குறிப்பிட்டிருந்தது.
இந்தப் பதிவைப் பார்த்த இணையவாசிகள் பலர் அதிர்ச்சி தெரிவித்தனர்; சிலர் நகைச்சுவையாகக் கருத்து பதிவிட்டனர்.
இது ஆட்குறைப்பாக இல்லாமல் போனதற்கு ஆறுதல் அடைந்துகொள்ளுமாறு ஒருவர் பதிவிட்டார். இன்னொருவர் வேலை நியமன ஒப்பந்தம் இருந்தால் நிறுவனத்துக்கு அடிபணியாமல் இழப்பீடு கோருமாறு ஆலோசனை கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
ஒருவேளை நீங்களே வேலையை விட்டுப் போக நிறுவனம் இவ்வாறு செய்கிறதோ என்றார் ஓர் இணையவாசி.

