தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விடுப்பு கிட்டாததால் இணையம்வழி மணமுடித்த வெளிநாடுவாழ் இந்தியர்

1 mins read
3adc3b6f-5184-4f2b-a143-2d7e2465ad9e
நவீன தொழில்நுட்பத்தால்தான் இத்திருமணம் சாத்தியமானது என்கிறார் பெண்ணின் உறவினர் ஒருவர். - மாதிரிப்படம்: ஊடகம்

ஷிம்லா: வெளிநாட்டில் பணியாற்றும் இந்திய ஆடவர் ஒருவருக்கு விடுப்பு கிடைக்காததால், தமக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை இணையம் வழியாக அவர் திருமணம் செய்துகொண்டார்.

இமாச்சலப் பிரதேச மாநிலம், பிலாஸ்பூரைச் சேர்ந்த அட்னன் முகம்மது என்ற அந்த ஆடவர் துருக்கியில் பணியாற்றி வருகிறார்.

அவருக்கும் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்நிலையில், திருமணத்திற்காகத் தாய்நாடு செல்ல அட்னன் விடுப்பு கேட்டபோது, அவரது கோரிக்கையை ஏற்க அவர் பணிபுரிந்துவரும் நிறுவனம் மறுத்துவிட்டது.

இதனிடையே, மணப்பெண்ணின் தாத்தாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது. தாம் கண்மூடுவதற்குள் தம் பேத்தியின் திருமணத்தைப் பார்க்கவேண்டும் என்று அவர் கட்டாயப்படுத்தினார்.

இதனையடுத்து, இணையம் வழியாகத் திருமணத்தை நடத்துவது என இருவீட்டாரும் முடிவுசெய்தனர். அதன்படி, கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 4) அவர்களது திருமணம் இணையம்வழி நடந்தேறியது.

காணொளி வழியே தோன்றிய மணமகனும் மணமகளும், தாங்கள் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வதாக மும்முறை கூறி, தங்களது திருமண உறவை உறுதிசெய்தனர்.

நவீன தொழில்நுட்பத்தால் அத்திருமணம் சாத்தியமானது என்றார் பெண்ணின் உறவினரான அக்ரம் முகம்மது.

கடந்த ஆண்டும் இமாச்சலப் பிரதேசத்தில் இதுபோல் காணொளி வழியாக ஒரு திருமணம் நடந்தேறியது.

நிலச்சரிவாலும் திடீர் வெள்ளத்தாலும் திருமண மண்டபத்தைச் சென்றடைய முடியாததால், ஆஷிஷ் சிங்கா - ஷிவானி தாக்குர் இருவரும் இணையம் வழியாகத் திருமணம் செய்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்