தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மொழி எதிர்ப்பு, திணிப்பு இரண்டும் உதவாது: பவன் கல்யாண் கருத்துக்கு பிரகாஷ் ராஜ் கண்டனம்

2 mins read
5198eccb-f59e-4d6f-9102-8d9de0e7c52c
பவன் கல்யாண், பிரகாஷ் ராஜ். - படம்: ஊடகம்

அமராவதி: ஒரு மொழியை வலுக்கட்டாயமாகத் திணிப்பது, கண்மூடித்தனமாக எதிர்ப்பது ஆகிய இரண்டுமே நாட்டின் ஒருங்கிணைப்பு நோக்கத்தை அடைய உதவாது என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

ஒரு மொழியாக, இந்தியை தாம் ஒருபோதும் எதிர்த்ததில்லை என்றும் அதைக் கட்டாயமாக்குவதை மட்டுமே எதிர்த்தேன் என்றும் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“தேசிய கல்விக்கொள்கையே இந்தி மொழியைத் திணிக்காதபோது, ​​அது குறித்து தவறான கதைகளைப் பரப்புவது பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் முயற்சி.

“பல மொழிக் கொள்கை மாணவர்களுக்கு விருப்பத்தேர்வை வழங்கவும் தேசிய ஒற்றுமையை ஊக்குவிக்கவும் இந்தியாவின் வளமான மொழியியல் பன்முகத்தன்மையைப் பாதுகாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“ஒவ்வொரு இந்தியருக்கும் மொழியியல் சுதந்திரம், கல்வித் தேர்வு என்ற கொள்கையில் எனது கட்சி உறுதியாக நிற்கிறது,” என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்தி மொழியைத் திணிக்காதீர்கள் என்று கூறுவது பிறமொழி மீதான வெறுப்பன்று என்றும் அது தாய்மொழியைப் பாதுகாக்கும் முயற்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“எங்களின் தாய்மொழியை, எங்களது கலாசார அடையாளத்தை சுயமரியாதையோடு பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதை பவன் கல்யாணுக்கு யாரேனும் எடுத்துச் சொல்ல வேண்டும்,” என்று தமது சமூக ஊடகப் பக்கத்தில் பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, பவன் கல்யாணின் கருத்துக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்பு பவன் கல்யாண் தெரிவித்த கருத்தை தமது சமூக ஊடக[ப் பதிவில் சுட்டிக்காட்டியுள்ள கனிமொழி, அதன் கீழே பவன் கல்யாணின் தற்போதைய கருத்தையும் குறிப்பிட்டு, அவரை விமர்சித்துள்ளார்.

பவன் கல்யாணின் கருத்துக்கு பலரும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்