மாலே: நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள மாலத்தீவின் அதிபர் இவ்வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
அதிபர் முகம்மட் முய்சு தனது இந்தியப் பயணத்தின்போது கடன் பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலத்தீவு கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் பொருளியல் நெருக்கடியை எதிர்நோக்குவதாக பிபிசி தகவல் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு புதுடெல்லியின் செல்வாக்கை குறைக்கும் நோக்கில் ‘இந்தியா வெளியேறு கொள்கையை’ மையமாகக் கொண்டு அதிபர் தேர்தல் பிரசாரத்தில் முய்சு ஈடுபட்டார். அதில் வெற்றியும் பெற்று அவர் அதிபரானார்.
பின்னர் பாராமுகமாக இருந்த அதிபர் முய்சு இந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதிபர் தேர்தலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மோசமடைந்தது.
ஆனால் அண்டை நாட்டை புறக்கணிக்க முடியாது என்பதை முய்சுவின் பயணம் உணர்த்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
செப்டம்பரில் மாலத்தீவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 440 மில்லியன் டாலராகும். இது, இரண்டு மாத இறக்குமதிக்குக்கூட போதாது என கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
கடந்த மாதம் உலக நிறுவனமான ‘மூடி’ (Moody) மாலத்தீவின் கடன் மதிப்பீட்டைக் குறைத்து கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலை உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டது.
இந்நிலையில் இந்தியா கைகொடுத்தால் அந்நாட்டின் வெளிநாட்டு நாணயச் செலாவணி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா செல்வதற்கு முன்பு துருக்கி, சீனா ஆகிய நாடுகளுக்கும் முய்சு செல்கிறார்.
திரு முய்சு அதிபரான பிறகு பிரதமர் மோடியைப் பற்றி மூன்று அமைச்சர்கள் தரக்குறைவாக பேசியது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மாலத்தீவு ஆய்வாளரும் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளருமான அஸிம் ஸாஹிர், அதிபர் முய்சுவின் பயணம் பல வகைகளில் திருப்புமுனையாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
“குறிப்பிடும்படியாக, மாலத்தீவு எந்த அளவுக்கு இந்தியாவைச் சார்ந்திருக்கிறது என்பதை அவரது பயணம் காட்டுகிறது. இதனை வேறு எந்த நாட்டாலும் ஈடுகட்ட முடியாது,” என்றார் அவர்.