புதுடெல்லி: இணையத்தளம் ஒன்றுக்குள் அனுமதியின்றி ஊடுருவி, கிட்டத்தட்ட 4,000 அக்னி வீரர்கள் தொடர்பான முக்கியத் தரவுகளை ‘டார்க் வெப்’ எனப்படும் சட்டவிரோதக் குழுக்களால் பயன்படுத்தப்படும் ரகசியத் தளங்களில் US$500க்கு (S$644) விற்க முயன்ற 14 வயதுச் சிறுவனை புதுடெல்லி காவல்துறை பிடித்துள்ளது.
அச்சிறுவன் இந்தியாவின் ஹரியானா மாநிலம், பல்லப்கர் பகுதியைச் சேர்ந்தவன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக புதுடெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
முன்னாள் அக்னி வீரர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்வதற்கும் பிற அரசாங்கத் துறைகளில் வேலைவாய்ப்புகளைத் தேடுவதற்கும் அமைக்கப்பட்ட இணையத்தளத்தில் அச்சிறுவன் ஊடுருவியுள்ளான்.
பின்னர், அதிலுள்ள தகவல்களைத் திருடி, ஏறக்குறைய 4,000 அக்னி வீரர்களின் தனிப்பட்ட தரவுகள் தன்னிடம் இருப்பதாகவும் அவற்றை விற்கத் தயாராக இருப்பதாகவும் ‘டார்க் வெப்’ என்னும் ரகசிய இணையத்தளத்தில் அவன் விளம்பரம் செய்துள்ளான்.
அந்த இணையத்தளத்தில் ஊடுருவ, அச்சிறுவன் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதுடெல்லி காவல்துறையின் இணையவழிக் குற்றத்தடுப்புப் பிரிவினர், அச்சிறுவனின் கைப்பேசி, கணினிச் சாதனங்களிலிருந்து தரவுகளை மீட்டுள்ளனர். தரவுகள் திருடப்பட்டதன் காரணத்தைக் கண்டறியவும் புலனாய்வாளர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர்.
மீட்கப்பட்ட தகவல்களை ஒப்பிட்டுப் பார்த்து அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதற்காக, அக்னி வீரர்களின் அதிகாரபூர்வத் தரவுத்தளத் தகவல்களைப் பகிருமாறு இந்திய உள்துறை அமைச்சைக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
தடுத்துவைக்கப்பட்ட சிறுவன், முதற்கட்ட விசாரணை முடிந்ததும் அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
ஆட்சேர்ப்பு இணையத்தளத்தில் ஊடுருவல் இடம்பெற்றதையோ அல்லது விளம்பரப்படுத்தப்பட்ட பதிவுகள் உண்மையானவை என்பதையோ அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.
சிறுவனிடமிருந்து மீட்கப்பட்ட தரவுகளைத் தாண்டி வேறு தகவல்கள் கசிந்துள்ளனவா, மூன்றாம் தரப்பினர் யாரேனும் இத்தரவுத்தளத்தை வாங்கியுள்ளனரா அல்லது அணுகியுள்ளனரா என்பதைக் கண்டறிய விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
அக்னி வீரர்கள் தொடர்பான தரவுகளைக் கொண்ட ஆட்சேர்ப்பு இணையத்தளத்தின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை இச்சம்பவம் எழுப்பியுள்ளது.
இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் நான்கு ஆண்டுகாலப் பணிக்கு வீரர்களைச் சேர்க்கும் ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்தை இந்திய அரசாங்கம் 2022 ஜூன் மாதம் தொடங்கியது. அத்திட்டத்தின்கீழ் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுகின்றனர்.
