ஆந்திராவில் ஆசிரியை அடித்ததில் சிறுவன் உயிரிழப்பு

ஆந்திராவில் ஆசிரியை அடித்ததில் சிறுவன் உயிரிழப்பு

படம்: இந்து தமிழ் திசை

22 Aug 2026 - 5:50 pm

1 mins read

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலத்தில் வீட்டுப்பாடம் செய்யாத காரணத்தால் ஆசிரியை அடித்ததில் ஆறு வயதுச் சிறுவன் வகுப்பறையிலேயே உயிரிழந்தான். விசாகப்பட்டினத்தில் உள்ள ‘லிட்டில் கார்டன்’ என்ற தனியார் பள்ளியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பிரணய் தேஜா என்ற அச்சிறுவன் அதிர்ச்சியடைந்து பயந்து கதறி அழுது ஆசிரியை மடியிலேயே மயங்கி விழுந்தான். இந்தக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

உடனடியாக கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அச்சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

பயத்தால் ஏற்பட்ட மாரடைப்பே உயிரிழப்புக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், உடற்கூராய்வு அறிக்கையில் உண்மையான காரணம் தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பெற்றோரும் உறவினர்களும் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவத்திற்கான உண்மையான காரணங்களைக் கண்டறியவும் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியை தரப்பில் நிகழ்ந்த தவறுகள், விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்தவும் மூன்று அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அரசு உடனடியாக அமைத்து உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
போராட்டம்மாணவர்ஆந்திராஆசிரியர்வழக்கு