பானிபூரி சாப்பிட்ட சிறுவன் மரணம்; மருத்துவமனையில் 18 பேருக்கு சிகிச்சை

பானிபூரி சாப்பிட்ட சிறுவன் மரணம்; மருத்துவமனையில் 18 பேருக்கு சிகிச்சை

2 mins read
6cd1e5c9-fc54-4ab3-825c-1c1fe69b036f
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வயதுச் சிறுவன் உயிரிழந்தான். அவனது மறைவு குடும்பத்தினரிடையே ஈடுசெய்ய முடியாத துயரத்தை ஏற்படுத்தியதோடு ஒட்டுமொத்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. - படம்: இந்தியா டுடே

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலம், கிரிடி மாவட்டத்தில் சாலையோர விற்பனையாளர் ஒருவரிடம் பானிபூரி வாங்கிச் சாப்பிட்ட ஆறு வயதுச் சிறுவன் உயிரிழந்தான்.

மேலும், 18 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிடி மாவட்டத்தில் உள்ள ‘பஜ்டோ’ கிராமத்திற்குச் சனிக்கிழமை பானிபூரி விற்பனையாளர் ஒருவர் சென்றிருந்தார்.

அவரிடம் பானிபூரி வாங்கிச் சாப்பிட்ட பலருக்கு அன்றிரவே வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அனைவரும் சிகிச்சைக்காக ‘சதர்’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 6 வயதுச் சிறுவன், சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்தான்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள மற்ற 18 பேரில் பெரும்பாலானோர் சிறுவர்கள்.

தற்போது அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தகவல் அறிந்ததும் காவல்துறையினரும் நிர்வாக அதிகாரிகளும் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து அறுவை சிகிச்சை மருத்துவர் பச்சா பிரசாத் சிங் கூறுகையில், “பானிபூரி சாப்பிட்டதால் உணவு நஞ்சாகி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முழுமையான ஆய்வு அறிக்கை வந்த பின்னரே தெளிவான காரணம் தெரியவரும்,” என்றார்.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் விசாரணையைத் தொடங்கியுள்ளன.

இதற்கிடையே, பானிபூரி விற்ற நபர் தலைமறைவாகிவிட்ட நிலையில், காவல்துறையினர் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்