லக்னோ: இந்தியாவின் அரசாங்கப் பள்ளி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட எதிர்மறை மந்திரச் சடங்கின் (black magic) அங்கமாக ஏழு வயது மாணவர் ஒருவர் ‘பலிகொடுக்கப்பட்டதாக’ நம்பப்படுகிறது என்று காவல்துறையினர் வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 27) தெரிவித்தனர்.
பள்ளிக்குப் புகழையும் வெற்றியையும் தேடித்தர அந்த மாணவர் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
சம்பந்தப்பட்ட மாணவர், தாஜ் மஹால் நினைவுச் சின்னத்துக்கு அருகில் உள்ள ஹாத்ராஸ் நகரில் தான் தங்கியிருந்த மாணவர் தங்குமிடத்தில் இம்மாதம் 22ஆம் தேதியன்று கட்டிலில் மாண்டுகிடந்தார். மாணவர் மாண்டது பற்றி அப்பள்ளி இயக்குநரான தினேஷ் பாகெல் காவல்துறையிடம் தெரியப்படுத்தாமல் அவரின் உடலைத் தனது காரின் பின்புறத்தில் ஒளித்து வைத்திருக்கிறார்.
பாகெலின் தந்தை நடத்திய எதிர்மறை மந்திரச் சடங்கிற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாணவர் கொல்லப்பட்டார் என்று காவல்துறை அதிகாரி ஹிமான்ஷு மதூர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
“சடங்கின் அங்கமாக அந்தச் சிறுவன் வழிபாட்டுப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படவிருந்தார். ஆனால், சடங்கு நிறைவடைவதற்கு முன்பே அவர் கொல்லப்பட்டார்,” என்று திரு மதூர் குறிப்பிட்டார்.
பாகெல், அவரின் தந்தை, பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் மூவர் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக திரு மதூர் தெரிவித்தார். மாணவர் எப்படி இறந்தார் என்பதன் தொடர்பில் அவர் மேல்விவரம் ஏதும் வெளியிடவில்லை. மாணவரின் உடலில், உடற்கூராய்வு மேற்கொள்ளப்படுவதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
இந்தியாவில், 2014லிருந்து 2021ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மனிதர்கள் பலிகொடுக்கப்பட்டதாக 103 புகார்கள் அந்நாட்டின் தேசிய குற்றப் பதிவுகளில் இடம்பெற்றுள்ளன.
எதிர்மறை மந்திரச் சடங்குகளில் பலிகொடுப்பது தெய்வங்களைத் திருப்திப்படுத்தும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகள், ஒதுக்குப்புறமாக இருக்கும் இடங்கள் ஆகியவற்றில் இந்த வழக்கம் அதிகம் காணப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்
அத்தகைய பகுதிகளில் உள்ள மக்களிடையே மந்திர தந்திரங்கள் போன்றவற்றில் அதிக நம்பிக்கை இருப்பது அதற்குக் காரணம்.