50 ரூபாய்க்காகப் பேனாவை விழுங்கிய சிறுவன்

1 mins read
538d42f0-05fb-4286-9801-b68a21865e8a
பெருங்குடலில் சிக்கிய பேனாவை மருத்துவர்கள் அகற்றினர். - படம்: மாலை மலர்

குண்டூர்: ஐம்பது ரூபாய் பந்தயத்துக்காகப் பேனாவை விழுங்கிய மாணவனின் பெருங்குடலில் அது சிக்கிக்கொண்டது. எனினும், அந்தப் பேனாவை மருத்துவர்கள் அகற்றியதையடுத்து அவரின் பெற்றோர் நிம்மதியடைந்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சீனிவாச ராவ். இவரது மகன் முரளி கிருஷ்ணா, 16, கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்த முரளி கிருஷ்ணா தன் நண்பர்களுடன் அவ்வப்போது பந்தயம் வைத்துள்ளார்.

அந்த வகையில், அவரது நண்பர்கள் சிலர் ஒரு பேனாவை அப்படியே விழுங்கினால் ஐம்பது ரூபாய் தருவதாக பந்தயம் கட்டியுள்ளனர். இதையடுத்து முரளி கிருஷ்ணா அந்தப் பேனாவை விழுங்கியுள்ளார்.

அன்று முதல் அவருக்கு தீராத வயிற்று வலி இருந்துள்ளது. ஆனால், பெற்றோருக்குப் பயந்து அவர் வாய் திறக்கவில்லை.

இந்நிலையில், கடந்த 18ஆம் தேதியன்று கடும் அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதை அறிந்த நண்பர்கள் முரளி கிருஷ்ணா பேனாவை விழுங்கியதாக அவரது பெற்றோரிடம் தெரிவித்தனர்.

பதறிப்போன பெற்றோர் மகனை குண்டூர் அரசு மருத்துவமைனக்கு அழைத்துச் செல்ல, அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் முரளி கிருஷ்ணாவின் பெருங்குடலில் பேனா சிக்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மருத்துவர்கள் ‘எண்டோஸ்கோபி’ முறையில் பெருங்குடலில் சிக்கியிருந்த பேனாவை அறுவை சிகிச்சையின்றி அகற்றினர்.

குறிப்புச் சொற்கள்