பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் உயர் ஜாதியைச் சேர்ந்த பிரமுகர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு தொடுத்த காரணத்தால் 50க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அங்குள்ள யத்கிர் மாவட்டத்தில், தலித் பிரிவைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ஒருவர் சீரழித்தது தொடர்பாக இந்தப் புகார் அளிக்கப்பட்டது.
சிறுமியை சீரழித்தவர் மீது அவரது குடும்பத்தார் காவல்துறையில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த புறக்கணிப்பு நடவடிக்கை தொடங்கியதாகத் தெரிகிறது.
தாம் சீரழிக்கப்பட்டது குறித்து 15 வயதான அச்சிறுமி, தொடக்கத்தில் தனது குடும்பத்தாரிடம் ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்நிலையில் அச்சிறுமி கருவுற்றார் என்றும் அதன் பிறகு நடந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தாரிடம் தெரிவித்தார் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகச்செய்தி தெரிவிக்கிறது.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதியன்று காவல்துறையில் சிறுமியின் குடும்பத்தார் புகார் அளித்தனர். முன்னதாக, சிறுமியைச் சீரழித்தவருக்கு ஆதரவாக சிறுமியின் குடும்பத்தாரைத் தொடர்புகொண்ட சிலர் சமரசத் தீர்வுக்கு வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
சிறுமியின் குடும்பத்தார் இதற்கு மறுக்கவே, 50க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்களைப் புறக்கணிக்குமாறு மேல்சாதி தலைவர்கள் சிலர் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
தலித் குழந்தைகளுக்கு பேனா, பென்சில்கள், நோட்டு புத்தகங்கள் ஆகியவற்றை விற்க கடைக்காரர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும் அன்றாட, அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காததால் வெகுதூரம் உள்ள கடைகளில் இருந்து அவற்றை வரவழைக்க வேண்டியுள்ளதாகவும் தலித் மக்கள் புகார் எழுப்பியுள்ளனர்.
கர்நாடகாவின் மிகவும் பின்தங்கியுள்ள மாவட்டமாக உள்ளது யத்கிர். அங்கு தலித் மக்கள் தொடர்ந்து பல்வேறு விதமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்று ஊடகச்செய்தி தெரிவிக்கிறது.

