புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவு வழங்கிய துருக்கிக்கு இந்தியாவில் எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது.
ஏராளமான இந்தியர்கள் துருக்கி விடுமுறைப் பயணத்தை ரத்து செய்துள்ளனர். வர்த்தகர்கள் துருக்கியில் இருந்து எதனையும் வாங்க வேண்டாம் என முடிவு செய்துள்ளர்.
துருக்கியிலிருந்து இறக்குமதியாகும் எல்லாப் பொருள்களையும் காலவரையறை இன்றி ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்பதாக அனைத்து இந்திய பயனீட்டுப் பொருள் விநியோகிப்பாளர் கூட்டமைப்பு திங்கட்கிழமை (மே 19) அறிவித்தது.
துருக்கியில் இருந்து சாக்லெட், பிஸ்கட், சருமப் பராமரிப்புப் பொருள்கள் ஆகியவற்றை இறக்குமதி செய்யும் வர்த்தகர்கள் அந்தச் சங்கத்தில் இடம்பெற்று உள்ளனர்.
இந்நிலையில், ‘துருக்கியைப் புறக்கணிப்போம்’ என்ற பிரசாரம் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பரவி வருகிறது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட துருக்கி, காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் அணுகுமுறையை ஆதரித்த சம்பவம் ஏற்கெனவே நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மூண்ட மோதலின்போது பாகிஸ்தானுக்கு அரசியல் மற்றும் ராணுவ ஆதரவை வழங்க துருக்கி முன்வந்தது. அச்செயல் இந்திய மக்களின் எதிர்ப்புக்கு ஆளானது.
அதனைத் தொடர்ந்து, ராணுவ மோதலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவற்றுடனான வர்த்தகத் தொடர்பைத் துண்டிக்க வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் எதிர்ப்பு முழக்கம் எழுப்பப்பட்டு வருகிறது.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மில்லியா இஸ்லாமியா, மௌலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் துருக்கிய கல்வி நிறுவனங்களுடனான தொடர்பை ஏற்கெனவே நிறுத்திவிட்டன.