பெங்களூரு: பிபிஎல் (BPL) நிறுவனத்தின் நிறுவனரும் தொழிலதிபருமான டி.பி. கோபாலன் நம்பியார், வியாழக்கிழமை (அக்டோபர் 31) காலமானார். அவருக்கு வயது 94.
திரு நம்பியாரின் மறைவுக்கு அவரின் குடும்பத்தினர், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1963ல் கேரள மாநிலம் பாலக்காட்டில் பிபிஎல் நிறுவனத்தை நிறுவினார் நம்பியார்.
பிரிட்டன், அமெரிக்காவில் பணியாற்றிய அனுபவம் கொண்ட திரு நம்பியார், இந்தியாவின் தரமான மின் பொருள்களை உற்பத்தி செய்யும் நோக்கில் பிபிஎல் நிறுவனத்தைத் தொடங்கினார்.
மருத்துவ உபகரணங்கள், தொலைக்காட்சி, குளிரூட்டி, துணி துவைக்கும் இயந்திரம், குளிர்பெட்டி, தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றை பிபிஎல் நிறுவனம் உற்பத்தி செய்தது.
1980,1990களில் பிபிஎல் தயாரித்த வண்ணத் தொலைக்காட்சிகள் இந்திய மக்களிடையே மிகப் பிரபலமானது.
முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், நம்பியாரின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மறைவுக்கு முன்னாள் கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, காங்கிரஸ் கட்சியின் சசி தரூர், கர்நாடக மாநிலத் தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டீல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

