தேசிய சிறார் விருது பெற்ற துணிச்சல் மிகுந்த ஷ்ரவன் சிங்

1 mins read
96627dc8-e201-4c89-a30b-6cda65caca31
வீரதீர செயலுக்கான ‘தேசிய சிறார் விருதை’ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பெறுகிறார் ஷ்ரவன் சிங். - படம்: தினமணி

புதுடெல்லி: பஞ்சாப் மாநிலம், பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மம்டோட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஷ்ரவன் சிங். இவரது தந்தை சோனா சிங் ஒரு விவசாயி. பாகிஸ்தான் எல்லையிலிருந்து 2 கி.மீ தொலைவில் இவர்கள் வசிக்கும் சிற்றூர் அமைந்துள்ளது.

காஷ்மீர் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, கடந்த மே மாதம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, இந்திய ராணுவ வீரர்கள் ஷ்ரவன் சிங்கின் தந்தைக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் முகாமிட்டிருந்தனர்.

பாகிஸ்தான் ராணுவம் குண்டுமழை பொழிந்த இக்கட்டான சூழலிலும் அதற்குச் சற்றும் அஞ்சாமல் இந்திய வீரர்களுக்குத் தேவையான குடிநீர், பால், மோர், தேநீர் மற்றும் உணவுகளை ஷ்ரவன் சிங் துணிச்சலாகச் சென்று வழங்கினார்.

இவரது இந்தத் துணிச்சலைப் பாராட்டி இந்திய ராணுவம் ‘இளம் சிவில் வீரர்’ என்ற விருதை ஏற்கெனவே வழங்கியிருந்தது.

தற்போது, வீரதீர செயலுக்கான ‘தேசிய சிறார் விருதை’ குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஷ்ரவன் சிங்கிற்கு வழங்கியுள்ளார்.

ஷ்ரவன் சிங் 4 வயதிலிருந்தே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது சேவையைப் பாராட்டும் விதமாக, இவரது மருத்துவச் செலவு, படிப்புச் செலவு முழுவதையும் இந்திய ராணுவமே ஏற்றுக்கொண்டுள்ளது.

“கல்வியை முடித்தபின் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்வேன்,” என்று ஷ்ரவன் சிங் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்