தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாக்கிய நரியைச் சேலையால் இறுக்கிக் கொன்ற வீரப்பெண்

2 mins read
41d1ead0-6cb1-40c8-ab44-c7f217cd0759
கழுத்து நெரிபட்டு மாண்ட நரி. - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

போபால்: தன்னைத் தாக்கிய நரியுடன் விடாது போராடிய பெண் ஒருவர், தான் உடுத்தியிருந்த சேலையாலேயே அதன் கழுத்தை இறுக்கிக் கொன்ற சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்தது.

கடந்த திங்கட்கிழமை (செப்டம்பர் 8) பின்னேரத்தில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் ஷிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்த சுராஜியா பாய் ஜாதவ், 65, என்ற அப்பெண்ணுக்கு 18 இடங்களில் காயமேற்பட்டது.

பர்காதி என்னும் சிற்றூருக்கு அருகிலிருந்த வயல்வெளியில் மயங்கிக் கிடந்த அவரை உள்ளூர்வாசிகள் கண்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

கணவனை இழந்தவரான சுராஜியா, சம்பவ நாளன்று மாலை 5 மணியளவில் புல் அறுப்பதற்காகத் தமது வயலுக்குச் சென்றார். அறுத்துக் கட்டிய புல்லைத் தூக்குவதற்காக அவர் குனிந்தபோது, சிறுபாலத்திற்குக் கீழே மறைந்திருந்த நரி அவர்மீது பாய்ந்து, கையையும் காலையும் கடித்தது.

“நான் இறக்கப்போவதாக நினைத்தேன்,” என்று மருத்துவமனைப் படுக்கையிலிருந்தபடி கூறினார் சுராஜியா.

நரி கடித்தாலும் அதன் தாடையை இறுகப் பற்றியபடி அதனை விழச் செய்தார் அவர்.

கிட்டத்தட்ட 20 நிமிடங்களாக நரியுடன் போராடிய அவர், தான் அணிந்திருந்த சேலையைக் கிழித்து, சுருக்கிட்டு, நரியின் கழுத்தில் மாட்டி இறுக்கினார். அதனை மீறிக்கொண்டு நரி அவர்மீது பாய்ந்தபோதும், நரியின் மூச்சு நிற்கும்வரை அவர் தமது பிடியை விடவில்லை.

இதனால் பெரிதும் தளர்ந்துபோன சுராஜியா, நரியின் அருகிலேயே மயங்கிச் சரிந்தார்.

“நள்ளிரவு தாண்டியும் அவர் கண் விழிக்காததால் மிகவும் அச்சமடைந்தோம்,” என்று சுராஜியாவின் உறவினர் ஒருவர் கூறினார்.

முதலில் அருகிலிருந்த பதரவாஸ் சுகாதார நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்ட சுராஜியா, பின்னர் ஷிவ்புரி மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆறு மாதங்களுக்குமுன் நரியால் தாக்கப்பட்ட சுராஜியாவின் மைத்துனர், பின்னர் வெறிநாய்க்கடி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டு, கடைசியில் இறந்தே போனார்.

சுராஜியாவின் உடலில் 18 இடங்களில் ஆழமாகக் காயமேற்பட்டு இருந்தாலும் தலை, கழுத்து, அடிவயிற்றுப் பகுதியில் பாதிப்பில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

“அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அவர் உடல்நலம் தேறிவிடுவார்,” என்றும் மருத்துவர்கள் கூறினர்.

இதனிடையே, அவரது மருத்துவச் செலவுகள் அனைத்தையும் வனத்துறை ஏற்றுக்கொள்ளும் என்று மாவட்ட வன அலுவலர் சுதான்ஷு யாதவ் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்