பாட்னா: ஹரியானாவில் ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் லட்சக்கணக்கான போலி வாக்காளர்களின் பெயர்கள் பதிவாகி உள்ளதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, முதற்கட்டமாக இன்று வியாழக்கிழமை (நவம்பர் 6) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில்,செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹரியானாவில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாகவும் மொத்தம் உள்ள வாக்குகளில் 8ல் ஒன்று போலியானது என்றும் புகார் எழுப்பினார்.
ஹரியானா முழுவதும் 5.21 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளதாகவும் ஏறக்குறைய 93 ஆயிரம் வாக்குகள் போலியான முகவரியைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகவும் ராகுல் சுட்டிக்காட்டினார்.
ஒரே முகவரியில் பல வாக்காளர்கள் என 19 லட்சம் பேர் உள்ளதை ஹரியானா மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், வாக்குப்பதிவுக்குப் பிறகான தேர்தல் கருத்துக்கணிப்புகள், ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ்தான் ஆட்சி அமைக்கும் எனக் கூறியிருந்தது என்றும் எனினும் தேர்தல் முடிவுகள் நேர்மாறாக அமைந்தன என்றும் குறிப்பிட்டார்.
“இளையர்களே, நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். ஏனென்றால் உங்களது எதிர்காலத்தைப் பற்றித்தான் நான் தற்பொழுது பேசுகிறேன். உங்களது வாக்குரிமையை நிலைநாட்டுவதற்காகத்தான் பேசுகிறேன்.
“பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் இந்தியாவின் ஹரியானா மாநிலத் தேர்தலில் வாக்களித்துள்ளார். பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண்ணின் பெயரை ஹரியானா மாநில வேட்பாளர் பட்டியலில் சேர்த்தது எப்படி,” என்று ராகுல் கேள்வி எழுப்பினார்.

