டெல்லியில் மூச்சுப் பிரச்சினையால் உயிரிழப்பு அதிகரிப்பு

2 mins read
10ff67a1-871e-44c4-ac2b-8563d52bb12d
டெல்லியின் மோசமான காற்றுத்தரம் மக்களைப் பெரிதும் பாதிக்கிறது. கடந்த டிசம்பர் 27ஆம் தேதி எடுக்கப்பட்ட இப்படத்தில் சாலைகளில் புகைமூட்டம் படர்ந்துள்ளது. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: டெல்லியில் மூச்சு தொடர்பான பிரச்சினைகளால் 2024ஆம் ஆண்டில் 9,211 பேர் உயிரிழந்துள்ளனர். இது 2023ஆம் ஆண்டின் 8,801 என்ற எண்ணிக்கையைவிட 4.6 விழுக்காடு அதிகமாகும். டெல்லி அரசு வெளியிட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான பிறப்பு, இறப்புத் தரவுகள் இதனைத் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் தொற்று, காசநோய் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்துள்ளது. டெல்லியின் காற்று மாசு, குளிர்காலங்களில் நிலவும் கடுமையான பனி போன்றவை முதியவர்கள், குழந்தைகளின் நுரையீரலைக் கடுமையாகப் பாதிப்பதே இந்த உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

சுவாசச் சுழற்சி அமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அதிகபட்சமாக 21,262 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்தநிலையில் தொற்று, ஒட்டுண்ணி நோயால் பாதிக்கப்பட்டு 16,060 பேர் இறந்துள்ளனர். மனநிலை, நடத்தை கோளாறு காரணமாக 62 பேர் உயிரிழந்துள்ளதாக 2024 ஆம் ஆண்டு தரவுகள் காட்டுகின்றன.

கடந்த 2024ல் மட்டும் டெல்லியில் இறந்தோர் எண்ணிக்கை 1.39 லட்சம் பேராகும். இதில் 85,391 ஆண்கள், 54,051 பேர் பெண்கள், 38 பேர் பிற பாலினத்தவர்கள். அதாவது டெல்லியில் கடந்த ஆண்டு கணக்கின்படி, ஒரு நாளுக்கு 381 பேர் இறந்துள்ளனர்.

அன்றாடம் சராசரியாக 381 இறப்புகள் பதிவாகும் நிலையில், சுவாச நோய்களால் ஏற்படும் மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது, டெல்லியின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பிற்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது என்றும் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்