தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

லஞ்சப் புகார்: மகளிர் ஆணையத் துணைத் தலைவர் கைது

1 mins read
615d921f-83ab-4218-aabc-48ea4f16e400
கைதான சோனியா அகர்வால். - படம்: இந்திய ஊடகம்

சண்டிகர்: லஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஹரியானா மாநில மகளிர் ஆணையத்தின் துணைத் தலைவர் சோனியா அகர்வாலையும் அவரது கார் ஓட்டுநர் குல்பீரையும் ஊழல் தடுப்பு ஆணையம் சனிக்கிழமையன்று (டிசம்பர் 14) கைதுசெய்தது.

நூறாயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டபோது குல்பீர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.

ஜஜ்ஜர் நகரைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருக்கும் ஹரியானா காவல்துறையில் துணை ஆய்வாளராகப் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அதன்பின் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, அவருடைய மனைவி கடந்த நவம்பர் 25ஆம் தேதி ஹரியானா மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்க்க ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் தருமாறும் அதனைத் தம் ஓட்டுநர் குல்பீரிடம் தருமாறும் அந்த ஆசிரியரிடம் சோனியா கூறினார்.

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர், ஊழல் தடுப்பு ஆணையத்தின் உதவியை நாடினார்.

அவரது புகாரை அடுத்து, சோனியாவையும் குல்பீரையும் கையும் களவுமாகப் பிடிக்க ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டனர். அதற்காக இரு குழுக்கள் அமைக்கப்பட்டன.

“ஒரு குழு சோனிபட்டிற்கும் இன்னொரு குழு ஹிசாருக்கும் சென்றது. ஹிசாரிலுள்ள ஒரு பூங்காவிற்கு அருகே குல்பீரிடம் அந்த ஆசிரியரிடமிருந்து லஞ்சப் பணத்தைப் பெற்றபோது குல்பீர் கைதுசெய்யப்பட்டார். அதன்பின் சோனியாவையும் கைதுசெய்த அதிகாரிகள், இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்,” என்று ஆணையத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்