அரசுப் பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற லஞ்சம்; ஏழு பேர் அடங்கிய கும்பல் கைது

அரசுப் பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற லஞ்சம்; ஏழு பேர் அடங்கிய கும்பல் கைது

2 mins read
95a64bb2-4845-4552-a78a-fe41627e5861
ஒரு தேர்வில் தேர்ச்சிபெற 4 லட்சம் ரூபாய் என கும்பல் வசூல் வேட்டையாடியது விசாரணையில் தெரியவந்தது. - படம்: இந்தியா டுடே

லக்னோ: பணியாளர் தேர்வு ஆணையத்தின் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற லஞ்சம் பெற்ற கும்பலை உத்தரப் பிரதேச மாநில சிறப்புப் படை கைது செய்துள்ளது.

‘ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்’ (SSC) எனப்படும் பணியாளர் தேர்வு மையத்தின் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்றதும் மத்திய அரசுப் பணி வழங்கப்படும்.

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு எஸ்எஸ்சி தேர்வுகளை நடத்தி, அதில் தேர்ச்சி பெறுபவர்களை ஆணையம் நியமித்து வருகிறது.

அந்தத் தேர்வுகள் முழுக்க முழுக்க மதிப்பெண் அடிப்படையில் நடைபெறுபவை. அதிகாரமட்டத்தில் உள்ள யாரும் அதில் தலையிடமுடியாது.

ஆயினும், ரூ. 4 லட்சம் கொடுத்தால் எஸ்எஸ்சி தேர்வில் தேர்ச்சிபெற ஏற்பாடு செய்வதாகக்கூறி உத்தரப் பிரதேசத்தில் ஒரு கும்பல் வசூல் வேட்டையில் இறங்கியது.

அது தொடர்பான ரகசியத் தகவல் பெற்ற மாநிலக் காவல்துறை சிறப்புப் படையை அனுப்பி வைத்தது. அந்தப் படை கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் திடீர் சோதனை நடத்தி ஏழு பேரைக் கைது செய்தது.

அவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய் ரொக்கம், மடிக்கணினிகள், கைப்பேசிகள், தேர்வுகள் தொடர்பான ஏராளமான ஆவணங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.

அந்த மோசடியில் மூளையாக இருந்து செயல்பட்டவரும் கைது செய்யப்பட்ட எழுவரில் அடங்குவார்.

மத்திய ஆயுதப் படை, தலைமைச் செயலக பாதுகாப்புப் படை, அசாம் துப்பாக்கிச்சுடும் படை ஆகியவற்றுக்கு பணியாளர்களை நியமிக்க நடத்தப்பட்ட தேர்வுகளில் அந்தக் கும்பல் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது.

தேர்வு நடந்துகொண்டிருக்கும்போதே விடைகளை மாணவர்களுக்குத் தெரிவிக்கும் நவீன முறையை அந்தக் கும்பல் கையாண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்