பிரிக்ஸ் மாநாட்டுக் கூட்டுப்பிரகடனம் ஒருமனதாக நிறைவேற்றம்

பிரிக்ஸ் மாநாட்டுக் கூட்டுப்பிரகடனம் ஒருமனதாக நிறைவேற்றம்

2 mins read
2a4a7faa-229f-4d8d-a79d-a2eb6a968eb8
மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், சீன அதிபர் ஸி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். - படம்: இந்து தமிழ் திசை

புதுடெல்லி: டெல்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டின் நிறைவில், உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் 45 பக்கங்கள் கொண்ட ‘பிரிக்ஸ் புதுடெல்லி கூட்டுப்பிரகடனம்’ அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

‘மீள்திறன், புத்தாக்கம், நிலையான வளர்ச்சியை உருவாக்குதல்’ என்ற முதன்மைக் கருப்பொருளின் அடிப்படையில் நடைபெற்ற இம்மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், சீன அதிபர் ஸி ஜின்பிங் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் நிறைவேற்றப்பட்ட கூட்டுப் பிரகடனத்தில், காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலுக்குக் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

எல்லை தாண்டிய பயங்கரவாதம், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் தருவது மற்றும் நிதியுதவி அளிப்பது போன்ற செயல்களுக்கு எதிராக எந்தவித சமரசமும் இன்றி ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஐநா பாதுகாப்பு மன்றத்தில் இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் பங்களிப்பை விரிவுபடுத்த உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மேலும், உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்குப் புறம்பாகச் சில நாடுகள் விதிக்கும் நியாயமற்ற அதிக வரி விதிப்பு முறைகள், உலக விநியோகச் சங்கிலியைப் பாதிப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நியாயமான வரி நடைமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தும் இந்த அம்சம், அனைத்துலக வர்த்தகத்தில் இந்தியாவின் அரசதந்திர வெற்றியாகக் கருதப்படுகிறது. மத்திய கிழக்கு, உக்ரேனில் நிலவும் போர்ச் சூழல் உலக நாடுகளுக்கு மிகுந்த கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள தலைவர்கள், பதற்றத்தைத் தணித்து அமைதியான பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

அணுசக்தி நிலையங்கள், வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் பிரிக்ஸ் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
பிரதமர்நரேந்திர மோடிபுட்டின்ஸி ஜின்பிங்பிரிக்ஸ்உச்சநிலை மாநாடுமத்திய கிழக்குஉக்ரேன்பேச்சுவார்த்தைஅணுசக்திஐநாபிரேசில்