புதுடெல்லி: பிரிக்ஸ் உச்ச நிலை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவிப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்புக்கும் பன்முகத்தன்மைக்கும் பிரிக்ஸ் அமைப்பின் தலைவர்கள் அளித்து வரும் வலுவான ஆதரவைத் தாம் பெரிதும் மதிப்பதாக அவர் தமது எக்ஸ் தளப்பதிவில் தெரிவித்துள்ளார்.
மாநாட்டில் பங்கேற்க வருகை தந்த உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநருக்கு பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி உற்சாக வரவேற்பு அளித்தார்.
மேலும், மாநாட்டுப் பிரகடனத்தில் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்குதல், மீள்திறன் கொண்ட சுகாதாரக் கட்டமைப்புகளை உருவாக்குதல், பெருந்தொற்று ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடித்தல், காசநோய் ஒழிப்பு முயற்சிகள், சுகாதாரப் பணியாளர்களை வலுப்படுத்துதல், மின்னிலக்கச் சுகாதாரம், பாரம்பரிய மருத்துவ முறைகளை ஒருங்கிணைத்தல் ஆகிய முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருப்பதை அவர் பாராட்டியுள்ளார்.
முன்னதாக, சனிக்கிழமை தொடங்கிய இந்த மாநாட்டில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டு 140 அம்சங்கள் அடங்கிய 45 பக்க பிரகடனத்தை ஒருமனதாக ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

