புதுடெல்லி: பிரிக்ஸ் உச்ச நிலை மாநாட்டின்போது நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகள் குறித்த முழுமையான விவரங்களை மத்திய அரசு எதிர்க்கட்சிகளிடம் வெளிப்படையாகப் பகிர வேண்டும் என்று முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரிக்ஸ் உச்ச நிலை மாநாட்டில் நடைபெற்ற பொதுவான நிகழ்வுகள், உலகத் தலைவர்களின் பங்கேற்பு குறித்த விவரங்கள் நாட்டிற்கும் உலகிற்கும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும், அம்மாநாட்டின் ஒரு பகுதியாக பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் இந்தியா நடத்திய இருதரப்பு சந்திப்புகளில் விவாதிக்கப்பட்ட முக்கியமான அம்சங்கள் முழுமையாக வெளிவரவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசு வெளியிடும் தகவல்கள் பெரும்பாலும் மேலோட்டமாகவே உள்ளதாகத் தெரிவித்த சல்மான் குர்ஷித், முக்கியமான விவகாரங்களில் எட்டப்பட்ட முடிவுகள் என்ன என்பது குறித்து நாடாளுமன்றத்திலும் சரி, வெளியிலும் சரி, எதிர்க்கட்சிகளுக்கு முறையான பதில்கள் வழங்கப்படுவதில்லை என்று கவலை தெரிவித்தார்.
நாட்டின் பாதுகாப்பும் வெளியுறவுக் கொள்கையும் அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானது என்பதால், எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டிய கவலைகள், முக்கியக் கோரிக்கைகள் குறித்து இந்த இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் விவாதிக்கப்பட்டனவா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
ஒருவேளை அவை விவாதிக்கப்படவில்லை என்றால், அதற்கான காரணங்களையும் அரசு விளக்க வேண்டும் என்று திரு குர்ஷித் கேட்டுக்கொண்டார்.
ஒரேயொரு சந்திப்பில் நாடுகளுக்கு இடையிலான அனைத்து சிக்கல்களுக்கும் தீர்வு கண்டுவிட முடியாது என்பதை ஒப்புக்கொண்ட அவர், பேச்சுவார்த்தைகளில் எஞ்சியுள்ள விவகாரங்கள் எவை, மேலும் விவாதிக்கப்பட வேண்டிய தலைப்புகள் எவை என்பது குறித்த தெளிவான விவரங்களை உரிய நேரத்தில் அரசு பகிர்வதே ஜனநாயக மரபுகளுக்குப் பொருத்தமாக இருக்கும் என்று வலியுறுத்தினார்.
