மணப்பெண் ஒருவரின் திருமண நாளே அவருடைய கடைசி நாளாக அமைந்துவிட்டது.
இந்தியாவின் குஜராத் மாநிலம், பாவ்நகரில் மணமேடையில் மாரடைப்பு ஏற்பட்டு மணப்பெண் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருமண மண்டபத்தில் விருந்தினர்கள் சூழ, பின்னணியில் திருமணப் பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருந்தபோது கொண்டாட்டங்கள் திடீரென நிறுத்தப்பட்டன.
மணமேடையில் அமர்ந்திருந்த மணப்பெண்ணுக்கு மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அருகிலுள்ள மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
மணப்பெண்ணின் மரணத்தால் அவருடைய குடும்பத்தார் துயரில் வாடியபோது, திருமண வைபவம் தொடர உறவினர்கள் வேறொரு திட்டத்தைப் பரிந்துரைத்தனர்.
அதன்படி, இறந்த மணப்பெண்ணின் தங்கை மணமகனைக் கரம்பிடிக்க உறவினர்கள் பரிந்துரைத்தனர்.
அதற்கு இணக்கம் தெரிவித்த மணப்பெண்ணின் குடும்பத்தார், அவருடைய தங்கையை மணமேடையில் ஏற்ற முடிவெடுத்தனர். திருமணச் சடங்கு முடியும்வரை இறந்தவரின் உடல் குளிரூட்டிக் கிடங்கில் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.


