தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மணமகன் மயங்கி விழுந்ததால் மணமுடிக்க மறுத்த மணமகள்

1 mins read
409aa21b-18a3-4400-a599-b038472ec3b5
மணமகன் மயங்கி விழுந்ததற்கான காரணத்தை மருத்துவர்கள் கூறியும் மணமகள் அதனை ஏற்கவில்லை. - மாதிரிப்படம்

ராஞ்சி: குளிர் தாங்க முடியாமல் மணமகன் மயங்கி விழுந்ததை அடுத்து மணமகள் திருமணத்தையே நிறுத்திய நிகழ்வு இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்தது.

பல மாதங்களாகத் திட்டமிட்டு, ஏராளமானோரை அழைத்திருந்தபோதும் அத்திருமணம் நடைபெறாமல் போனதால் வந்திருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர்.

கடந்த ஞாயிறன்று (டிசம்பர் 15) இரவு திருமணச் சடங்குகள் நடைபெற்றன. திறந்தவெளி மண்டபத்தில் நடந்ததால் மணமகன் அர்னவ் குமார், 28, ‘குளிர் தாங்க முடியவில்லை’ எனக் கூறியிருக்கிறார். அப்போது, வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருந்ததாகச் சொல்லப்பட்டது.

ஆனாலும், சடங்குகள் தொடர்ந்து நடைபெற்றதால் அர்னவ் திடீரென மயங்கி விழுந்தார்.

அன்றைய நாள் முழுவதும் எதுவும் உண்ணாமல் நோன்பு இருந்ததாலும் தாங்க முடியாத குளிராலும் அவர் மயங்கி விழுந்திருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆயினும், மணமகளான பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அங்கிதா, 25, அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

மணமகன் அர்னவால் குளிரைத் தாங்க முடியாமல் போனது, அவரது உடலில் வேறு பிரச்சினைகள் இருப்பதற்கு அறிகுறி எனக் கூறி, மணமகள் அங்கிதா திருமணத்தை நிறுத்திவிட்டு, மண்டபத்தைவிட்டு வெளியேறினார்.

குறிப்புச் சொற்கள்