ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு புதன்கிழமை (நவம்பர் 13) நடைபெற்றது.
அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 43ல் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அந்தத் தொகுதிகளில் 15 மாவட்டங்கள் இடம்பெற்று உள்ளன.
முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் மொத்தம் 683 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 73 பேர் பெண்கள்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையில் இண்டியா கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகியன அந்தக் கூட்டணியின் முக்கிய கட்சிகள்.
பெண்கள், பழங்குடி மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்தனர். பிற்பகல் 1 மணி நிலவரப்படி 46.25 விழுக்காட்டு வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
வாக்குச்சாவடிகள் ஆளில்லா வானூார்தி (டிரோன்) மூலம் கண்காணிக்கப்பட்டன.
முன்னதாக, ஜனநாயக திருவிழாவில் மக்கள் முழு ஆர்வத்துடன் வாக்களிக்க பிரதமர் மோடி புதன்கிழமை காலை அழைப்பு விடுத்திருந்தார்.

