வயநாடு: கேரள மாநிலத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை (நவம்பர் 13) இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.
ராகுல் காந்தியின் சகோதரியான பிரியங்கா காந்தி முதன்முறையாகத் தேர்தலில் போட்டியிடுவதால் வாக்காளர்களிடையே ஆர்வம் காணப்பட்டது. காலையில் தொடங்கியது முதல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் பிரியங்கா காந்திக்கு எதிராகக் களத்தில் உள்ளனர்.
அந்த மூவர் உள்பட மொத்தம் 16 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர்.
வயநாடு தொகுதியில் ஏறத்தாழ 14 லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர்.
2019, 2024 ஆகிய இரு தேர்தல்களிலும் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ஏராளமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இவ்வாண்டு வயநாடு, உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி இரண்டிலும் வென்றார்.
தொடர்புடைய செய்திகள்
தேர்தல் முடிவுகள் வெளியானதும் இரு தொகுதிகளில் வயநாடு தொகுதியைக் கைவிடுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2008ஆம் ஆண்டு அந்தத் தொகுதி உருவானது முதல் காங்கிரஸ் வேட்பாளர்களே இதுவரை அங்கு வெற்றி பெற்றுள்ளனர்.
இதற்கிடையே, புதன்கிழமை வாக்குப்பதிவு தொடங்குமுன் காங்கிரஸ் வேட்பாளா் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “வயநாட்டில் உள்ள சகோதர, சகோதரிகளே, உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. நீங்கள் அனைவரும் வாக்குச் சாவடிக்குச் சென்று உங்களின் உரிமையைப் பயன்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
“உங்கள் வாக்குகள்தான் நமது ஜனநாயகத்தின் பலம். வயநாட்டின் எதிர்காலத்திற்காக கைகோப்போம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.