புதுடெல்லி: விமானம் ஒன்றரை மணி நேரத்திற்குமேல் தாமதமானதாலும் விமானத்தில் தமக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை உடைந்திருந்ததாலும் ஏர் இந்தியா விமானச் சேவை குறித்த தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஜான்டி ரோட்ஸ்.
பாய்ந்து பாய்ந்து களக்காப்பு செய்வதில் வல்லவரான ரோட்ஸ், அண்மையில் மும்பையிலிருந்து டெல்லி சென்றபோது தமக்கு நேர்ந்த அனுபவம் குறித்து எக்ஸ் ஊடகம் வழியாகப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
அடுத்த 36 மணி நேரம் நல்லவிதமாக இருக்கும் என நினைக்கவில்லை என்றும் அவர் தமது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
ஏனெனில், அவர் டெல்லியிலிருந்து மீண்டும் சென்னை திரும்பி, பின்னர் அங்கிருந்து தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகருக்குச் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
“உங்களுக்கு நேர்ந்த அனுபவம் குறித்து வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரிக்கப்படும்,” என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, ரோட்சின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகவும் ஏர் இந்தியா நிறுவனத்தைக் கடிந்தும் பதிவிட்டுள்ளனர்.