குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி தொங்குபாலத்தைப் புதுப்பித்தபோது உடைந்த, துருப்பிடித்த கம்பிகள் பயன்படுத்தப்பட்டன. அதோடு, கம்பிகளை இணைக்கும் முறையும் தவறாக செய்யப்பட்டது. இதனால் அந்தப் பாலம் மீண்டும் திறக்கப்பட்ட ஒருசில நாள்களில் இடிந்து விழுந்ததாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் 135 பேர் மாண்டனர்.
சென்ற ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி அங்குள்ள மச்சு ஆற்றின் மேல் அமைந்துள்ள அப்பாலத்தின்மீது சுற்றுப்பயணிகள் குவிந்திருந்தபோது அப்பாலம் இடிந்து விழுந்தது.
பொதுமக்களுக்கு திறந்துவிடப்படுவதற்கு முன்பு அப்பாலம் தொடர்பில் முழுமையான சோதனை நடத்தப்படவில்லை என்று குஜராத் மாநிலத்தால் அமைக்கப்பட்ட ஐந்து பேரை உள்ளடக்கிய விசாரணைக் குழு தெரிவித்தது. பாலம் இடிந்து விழுவதற்கு முன்பே பாலத்தில் பல கம்பிகள் உடைந்திருந்தன என்றும் கூறப்பட்டது.
அதோடு, முறையான நிபுணர்களுடன் ஆலோசிக்காமல் புதுப்பிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் விசாரணைக் குழு குறிப்பிட்டது.
233 மீட்டர் நீளமுள்ள அந்தப் பாலம் 19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது கட்டப்பட்டது. ஏழு மாதங்களாக புதுப்பிப்புக்காக மூடப்பட்டு, அந்தப் பாலம் சென்ற அக்டோபர் மாதம் பொதுமக்களுக்கு திறந்துவிடப்பட்டது.


