எல்லாத் தேர்தல்களிலும் தனித்துப் போட்டி: மாயாவதி அறிவிப்பு

2 mins read
ba815ab0-d856-4208-b79b-dfcc0c5ab2ab
ஜனவரி 15ஆம் தேதி தமது 70வது பிறந்தநாளைக் கொண்டாடினார் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி. - படம்: பிடிஐ

லக்னோ: வரும் 2027ல் நடக்கவுள்ள உத்தரப் பிரதேச மாநிலச் சட்டமன்றத் தேர்தல் உட்பட அனைத்துத் தேர்தல்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அதன் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

தமது 70வது பிறந்தநாளை ஒட்டி வியாழக்கிழமை (ஜனவரி 15) லக்னோவில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சிறிய தேர்தலானாலும் பெரிய தேர்தலானாலும் தனித்துக் களம் காண்பதே பொருத்தமானதாக இருக்கும் என்று தமது கட்சி முடிவுசெய்துள்ளதாகத் தெரிவித்தார்.

இருப்பினும், எதிர்காலத்தில் இன்னொரு கட்சியின் வாக்குகள், குறிப்பாக உயர்சாதியினரின் வாக்குகள் தமக்குக் கிடைக்கும் எனக் கட்சி கருதினால், கூட்டணி பற்றி அப்போது முடிவெடுக்கப்படும் என்றும் முன்னாள் உத்தரப் பிரதேச முதல்வரான மாயாவதி கூறினார்.

2027ஆம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சியை மீண்டும் அரியணை ஏற்ற உத்தரப் பிரதேச மக்கள் முடிவுசெய்துள்ளதாகக் கூறிய அவர், அத்தேர்தலில் பகுஜன் சமாஜ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிப்பதை உறுதிசெய்யும் பணியில் கட்சித் தொண்டர்கள் முழுமையாகச் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட மற்றக் கட்சிகள் சாதி அடிப்படையிலானவை எனச் சாடிய மாயாவதி, உத்தரப் பிரதேசத்தில் தமது கட்சி ஐந்தாம் முறையாக ஆட்சி அமைக்கும்போது அவர்களுக்குச் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் சொன்னார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்தும் கவலை தெரிவித்த அவர், முந்திய தேர்தல்களில் வஞ்சகமும் முறைகேடுகளும் இடம்பெற்றதாகவும் சாடினார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் மாயாவதிக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்