புதுடெல்லி: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் இந்திய ராணுவத்துக்கான நிதி, கடந்த ஆண்டைவிட தற்போது 15 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்று நிதி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் ராணுவத்துக்காக செலவிடப்பட்ட பணம் எந்த அளவுக்கு உதவியாக இருந்தது என்பதை ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை தெளிவாக எடுத்துரைத்தது என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
“பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அடிப்படை கருவிகள்கூட போதுமான அளவு இல்லாத ஒரு காலமும் இந்தியாவில் இருந்தது.
“நமது ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஆடைகள் கிடைக்கவில்லை. துப்பாக்கிகள் இருந்தாலும் தோட்டாக்கள் இருக்காது,” என்றும் நிதி அமைச்சர் குறிப்பிட்டார். அத்தகைய நிலை இப்போதுதான் மாறியுள்ளது என்றார் அவர்.
மேலும், முரண்பட்ட கோரிக்கைகளை ஏற்று நிர்வகிப்பது என்பது ஒவ்வொரு நிதி அமைச்சரும் எதிர்கொள்ளும் பிரச்சினை என்றும் கூடுதல் வளங்களைப் பெறுவதற்கு வரிகளை உயர்த்துவது எப்போதும் தீர்வாகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஆனால் நாட்டின் தேவைகளை ஈடுகட்ட நிதி தேவைப்படுகிறது. எனினும், மக்கள் மீது ஒரு ரூபாய் வரி விதிக்கப்படுவதைக்கூட நிதியமைச்சு விரும்பவில்லை,” என்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தற்காப்புத் துறைக்கு 2026-2027 நிதியாண்டில் ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அடுத்த நிதியாண்டுக்கான மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% ஆகும்.
தொடர்புடைய செய்திகள்
ஆயுதப்படைகளை நவீனமயமாக்குதல், அவற்றின் வழக்கமான தேவைகளுக்கு நிதியளிப்பது, ‘சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு அவசரமாக ஆயுதங்கள், வெடி மருந்துகளைக் கொள்முதல் செய்ததால் உருவான நிதித் தேவைகளைப் புதிய நிதி ஒதுக்கீடு பூர்த்தி செய்யும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

