சவால்களுக்கு தீர்வளிக்காத பட்ஜெட்: காங்கிரஸ் சாடல்

சவால்களுக்கு தீர்வளிக்காத பட்ஜெட்: காங்கிரஸ் சாடல்

2 mins read
ffd32323-b51f-4eaf-9d02-b7f617a211c4
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே. - கோப்புப்படம்: ஸீநியூஸ்

புதுடெல்லி: மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை 2026 எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வளிக்கும் வகையில் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.

“இந்த வரவுசெலவுத் திட்ட அறிக்கை எந்தத் தீர்வுகளையும் வழங்கவில்லை, கொள்கையின்மை மறைக்க முழக்கங்களை கூட வழங்கவில்லை,” என திரு கார்கே சாடியுள்ளார்.

“பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்திடம் யோசனைகள் தீர்ந்துபோய் விட்டன. இந்த நிதிநிலை அறிக்கையில், இந்தியா எதிர்நோக்கும் எவ்விதப் பொருளாதார, சமூக, அரசியல் சவால்களுக்கு எவ்வகையிலும் தீர்வளிக்காது என்று திரு கார்கே, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“திட்டச் செயல்பாட்டு முறை” இப்போது “சவாலான பாதை” ஆகிவிட்டது.

“சீர்திருத்த விரைவு ரயில்” எந்த “சீர்திருத்த” சந்திப்பிலும் நிற்பது அரிதாகிவிட்டது.

நமக்குச் சோறுபோடும் விவசாயிகள் இன்னும் தேவையான நலத்திட்டம், நிலையான வருமானப் பாதுகாப்புத் திட்டத்திற்காக ஏங்கிக்கொண்டுள்ளனர். அவர்களுக்காக இந்த நிதிநிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை.

“ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் காணப்பட்ட சமத்துவமின்மை நிலை இப்போது எல்லை தாண்டிவிட்டது. ஆனால், இந்த நிதிநிலை அறிக்கையில் அதுபற்றி எதையும் குறிப்பிடவில்லை. பட்டியல் சாதி, பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் மற்றும் சிறுபான்மைச் சமூகங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை.

“நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மேலும் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள மாநில அரசுகளுக்கு அவை எந்த நிவாரணத்தையும் வழங்குவதாக தெரியவில்லை. கூட்டாட்சித் தத்துவம் பலியாகிவிட்டது,” என குறிப்பிட்டுள்ளார்.

அதில், “ உற்பத்தித் துறை புத்துயிர் பெறுவதற்கான உத்தி இல்லை, இன்னமும் 13% என்ற நிலையிலேயே தேங்கி நிற்கிறது. மேலும் ‘மேக் இன் இந்தியா’ குறித்தும் எதுவும் இல்லை.

ஏற்றுமதி சரிவு, கட்டண அபாயங்கள், வர்த்தக பற்றாக்குறை, சுருங்கி வரும் உலகளாவிய பங்கு ஆகியவற்றிற்கு எந்த பதிலும் இல்லை. வீழ்ச்சியடைந்து வரும் ரூபாய் மதிப்பை சரிசெய்ய ஏதேனும் திட்டம் உள்ளதா என்று திரு கார்கே கேள்வியெழுப்பியுள்ளார்.

உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த வாக்குறுதிகள் பலமுறை கூறப்படுகின்றன, ஆனால், செயல்பாடு இல்லை. நகரங்கள் இன்னும் வாழத் தகுதியற்றவையாகவே உள்ளன. எப்போது நமக்கு “ஸ்மார்ட் சிட்டிகள்” அல்லது வாழத் தகுதியான நகரங்கள் கிடைக்கும் என்று திரு கார்கே கேள்வியெழுப்பியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்