புதுடெல்லி: தென்மேற்கு டெல்லியின் சத்திய நிகேதன் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் மாண்டோர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துவிட்டதாக அதிகாரி ஒருவர் திங்கட்கிழமை (செப்டம்பர் 7) தெரிவித்தார்.
டெல்லிப் பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்திற்கு அருகே 50 ஆண்டுகள் பழைமையான ஐந்து மாடிக் கட்டடம் இயங்கி வந்தது. மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதியாக அது செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது.
தகவலறிந்ததும் விரைந்து சென்ற காவல்துறை, தீயணைப்புத் துறை, தேசியப் பேரிடர் மீட்புப் படை, பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் குழுக்கள் இணைந்து இரவு முழுவதும் தீவிர மீட்புப் பணிகளை மேற்கொண்டன. இடிபாடுகளிலிருந்து மொத்தம் 11 பேர் மீட்கப்பட்டனர்.
இரவில் மீட்கப்பட்ட மேலும் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றபோது வழியிலேயே இறந்துவிட்டதை அடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துவிட்டது என்று காவல்துறைத் துணை ஆணையர் அமித் கோயல் தெரிவித்தார். சம்பவத்திற்குக் காரணமானவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாகக் கட்டட உரிமையாளர் ஹரிராம் உள்ளிட்ட சிலர்மீது தெற்கு வளாகக் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றதே கட்டடம் இடிந்துவிழ காரணம் எனக் கூறப்படுகிறது.
டெல்லி முதல்வர் ரேகா குப்தா சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், இச்சம்பவம் குறித்து நீதி விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கட்டட விபத்தில் மாண்டவர்களின் குடும்பத்தார்க்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தோர் விரைந்து குணம்பெற வேண்டிக்கொள்வதாகக் கூறிய அவர், அவர்களுக்கு அதிகாரிகள் உதவி வருவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர் மழையால் அடித்தளத்தில் நீர் தேங்கியதே கட்டடம் இடிய காரணம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, அருகிலுள்ள பெண்கள் தங்குவிடுதியையும் மாநகராட்சி அதிகாரிகள் காலி செய்து முத்திரை வைத்தனர். அத்துடன், நான்கு தளங்களுக்குமேல் உள்ள சட்டவிரோதக் கட்டடங்களையும் உடனடியாக மூடி, முத்திரையிடும்படி மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.


