குப்பை மேடு சரிந்ததில் இடிந்துவிழுந்த கட்டடம், சிக்கிக்கொண்ட ஊழியர்கள்

குப்பை மேடு சரிந்ததில் இடிந்துவிழுந்த கட்டடம், சிக்கிக்கொண்ட ஊழியர்கள்

1 mins read
7fb32d27-6215-4d18-9eff-04afc55a8c72
புனேயில் குப்பை மேடு சரிந்ததால் இடிந்து விழுந்த கட்டடம். - படம்: சோஷியல் நியூஸ் xyz
multi-img1 of 3

புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவில், கனமழை காரணமாகக் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்தது. அந்த விபத்தில் குறைந்தது 16 ஊழியர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

பிம்ப்ரி சிஞ்ச்வாட் மாநகராட்சிக்கு உட்பட்ட மோஷி பகுதியில் உள்ள கழிவு மேலாண்மை, மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

அங்குள்ள பழைய கழிவுகள் கொட்டப்படும் பகுதியில், மலைபோல் குவிந்து கிடந்த குப்பை மேட்டின் அருகே இருந்த அக்கட்டடம், மாநகராட்சியின் சார்பில் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு தனியார் நிறுவனத்தின் அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

கடந்த இரு நாள்களாகப் பெய்த கன மழையினால் குப்பை மலை முழுமையாக ஊறி, நிலைத்தன்மையை இழந்து திடீரென சரிந்து கட்டடத்தின் மீது விழுந்துள்ளது என்று மாநகராட்சி ஆணையர் விஜய் சூர்யவன்ஷி தெரிவித்தார்.

விபத்து நடந்த சமயத்தில் கட்டடத்திற்குள் மொத்தம் 20 பேர் இருந்துள்ளனர். அவர்களில் நால்வர் நல்வாய்ப்பாக உடனடியாக வெளியேறித் தப்பியுள்ளனர். 16 ஊழியர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

தேசியப் பேரிடர் மீட்புப் படையும் தீயணைப்புத் துறையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள சில ஊழியர்களுடன் மீட்புக் குழுவினர் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாகச் செய்திகள் தெரிவித்தன.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்