புதுடெல்லி: விமான நிலையங்கள் அருகே உள்ள கட்டடங்களின் உயரக்கட்டுப்பாடு குறித்து ஆய்வு நடத்தப்படும் என மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை 88ல் இருந்து 162ஆக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
விமானப் பாதுகாப்புக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்றும் இதில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
‘ரியல் எஸ்டேட்’ துறை வளா்ச்சியடைந்து வரும் நிலையில், பாதுகாப்பான விமானப் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக விமான நிலையங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களுக்கு உயரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக திரு ராம்மோகன் நாயுடு சுட்டிக்காட்டினார்.
அதே வேளையில் உயரக் கட்டுப்பாடுகளை மேம்படுத்துவதற்கான வழிகளை ஆராய, உலகத் தரப்பிலான ஆய்வை மேற்கொள்ள இந்தியா விரும்புகிறது என்று குறிப்பிட்ட அவர், அனைத்துலக நிபுணா்களைக் கொண்டு சரியான வழிகாட்டுதல்களின்படி நடத்தப்படும் என உறுதியளித்தார்.
புதிய இலக்கின்படி, விமான நிலையங்கள் உரிய காலத்தில் அமைக்கப்படும் என்றும் இந்தியாவில் 350க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை அமைக்கும் திறன் உள்ளது என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
விமான நிலையங்களுக்கு அருகே உள்ள கட்டடங்களின் உயரக் கட்டுப்பாடுகள் தொடா்பாகப் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றைக் களைய அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் உதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றார்.

