உ.பி. அரசின் புல்டோசர் நடவடிக்கை: உச்ச நீதிமன்றம் கண்டனம்

உ.பி. அரசின் புல்டோசர் நடவடிக்கை: உச்ச நீதிமன்றம் கண்டனம்

1 mins read
dc8fed8a-a49c-4e67-9558-865812543059
புல்டோசர் கொண்டு வீடுகளை இடிக்கும் நடவடிக்கை மனசாட்சியை உலுக்கிறது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். - படம்: ஊடகம்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் புல்டோசர் இயந்திரம் மூலம் வீடுகளை இடிக்கும் அம்மாநில அரசின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது மனிதாபிமானமற்ற செயல் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உத்தரப் பிரதேசத்தில் குற்றவாளிகள், மாநில அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்துபவர்களின் வீடுகள் இடித்துத் தரைமட்டமாக்கப்படுகின்றன. இதன் மூலம் குற்றச்செயல்கள் குறையும் என அம்மாநில அரசு விளக்கம் தந்துள்ளது.

எனினும், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே இந்த நடவடிக்கையைக் கண்டித்தது. ஆனால், இத்தகைய நடவடிக்கைகள் நீடிக்கின்றன.

இந்நிலையில், கடந்த 2023ஆம் ஆண்டு காவல்துறை அதிக் அகமது என்பவரைச் சுட்டுக்கொன்றது. பின்னர், அவருக்குச் சொந்தமான கட்டடங்கள் இடிக்கப்பட்டன. அப்போது தவறுதலாக சிலரது வீடுகள் இடிக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.

இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், புல்டோசர் மூலம் இடிப்பது, தங்கள் மனசாட்சியை உலுக்குவதாகக் குறிப்பிட்டனர்.

மேலும், சட்டத்தின்படி, ஆட்சி நடக்கும் நாட்டில் இதுபோன்ற செயல்கள் மனிதாபிமானவற்றவை என்றே வகைப்படுத்தப்படும் என்றனர்.

“வீடு என்பது குடிமக்களின் உரிமை. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.10 லட்சம், ஆறு வாரங்களுக்குள் இழப்பீடாக வழங்கப்படும்,” என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்