உத்தரப் பிரதேசம்: பாரம்பரியம் கலந்தவாறு வண்ணமயமான கொண்டாட்டங்களாகத் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக, மாப்பிள்ளை ஊர்வலத்தைக் காண்பதற்குப் பலரும் ஆவலுடன் திரண்டிருப்பர்.
ஆனால், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஜான்சியில் சற்று மாறுபட்டு நடந்தது ஊர்வலம்.
குடும்பத்தார் ‘புல்டோசர்’ எனப்படும் நிலச்சமனியில் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
மாப்பிள்ளை ஒரு புல்டோசரில் வந்து இறங்குவதைக் காட்டும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
மணப்பெண்ணான கரிஷ்மா, வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 20) தமது புதிய வீட்டுக்குப் புறப்படத் தயாராக இருந்தார். தம் குடும்பத்தாரிடம் விடைபெற்றுவிட்டு அலங்கரிக்கப்பட்ட காரில் ஏறினார்.
ஆனால், அதன் பிறகு நடந்தவை எல்லாம் வந்திருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தின.
கிட்டத்தட்ட 12 புல்டோசர்கள் திருமண ஊர்வலத்தில் சேர்ந்துகொண்டன. முதலில் அதிர்ச்சியடைந்த கூட்டத்தினர் பின்னர் அந்த புல்டோசர்கள் திருமண ஊர்வலத்தில் அங்கம் வகிப்பதை உணர்ந்து காணொளி பதிவுசெய்யத் தொடங்கினர்.
மேலும், இந்த வித்தியாசமான ஊர்வலத்திற்கு ‘புல்டோசர் திருமணம்’ என்றும் பெயரிடப்பட்டுவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
தங்களுக்குச் சொந்தமான புல்டோசர்களைத் திருமணத்திற்குப் பயன்படுத்த விரும்பியதாக மாப்பிள்ளையின் மாமா ராம்குமார் என்டிடிவியிடம் தெரிவித்தார்.
“எல்லாருக்கும் பிடிக்கும் என நினைத்து இவ்வாறு செய்ய முடிவெடுத்தோம். உத்தரப் பிரதேசத்தில் புல்டோசர் மிகப் பிரபலம்,” என்றார் மாப்பிள்ளை ராகுல் யாதவ்.

