தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நான்கு தென்னிந்திய நகரங்களை இணைக்கும் புல்லட் ரயில் திட்டம்: சந்திரபாபு நாயுடு

2 mins read
e6ddbc28-a5b9-43db-89fc-6df7441ce2c3
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. - படம்: ஊடகம்

சென்னை: தென்னிந்திய மக்களும் புல்லட் ரயில் பயண அனுபவத்தைப் பெறும் வகையில், புதிய ரயில் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கு இத்திட்டம் உதவும் என்றும் அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள முக்கியமான நகரங்களில் புல்லட் ரயில் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில், தென்னிந்தியாவின் நான்கு முக்கியமான நகரங்களான ஹைதராபாத், அமராவதி, பெங்களூரு, சென்னை ஆகியவை புல்லட் ரயில் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட உள்ளன.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் மும்பை, அகமதாபாத் நகரங்களை இணைக்க உள்ளது. அதற்கான திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து இரண்டாவது கட்டமாக, நான்கு தென்னிந்திய நகரங்களை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என திரு சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வணிகம், தொழில், சுற்றுலா போன்ற துறைகளில் வேகமான வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், புல்லட் ரயில் திட்டத்தால் தென்னிந்திய மக்களின் நேரம் வெகுவாகச் சேமிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

“மக்கள் அதிக அளவில் பயனடைவர். நாட்டின் பொருளியல் முன்னேற்றத்தில் தென்னகமும் முக்கியப் பங்காற்றும். இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசின் ஆதரவும் ஜப்பான் தொழில்நுட்ப உதவியும் கிடைக்கும்,” என்று திரு சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

தென்னிந்தியாவின் முக்கியமான நகரங்களுக்கு இடையேயான தூரம் அதிகமாக உள்ளது. எனவே, ரயில், சாலை வழி பயணம் மேற்கொள்ள அதிக நேரமாகிறது.

சென்னையில் இருந்து பெங்களூரு செல்ல தற்போது ஆறு மணி நேரம் ஆகிறது எனில், புல்லட் ரயில் வந்தபிறகு அது ஒருமணி நேரமாகக் குறையும். இந்த வேகமும் வசதியும் மக்கள் வாழ்க்கை முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

நிறைய பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் நகரங்களுக்கு இடையேயான தொடர்புகள் எளிமையாகும் என்றும் தென்னிந்தியா வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

புல்லட் ரயில் குறித்த இந்த முக்கியமான தகவல்களை வெளியிட்ட சந்திரபாபு நாயுடு, இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டால், இந்தியாவில் அந்நிய முதலீடுகள் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்