அகமதாபாத்: மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்காக உயர்த்தப்பட்ட இருப்புப்பாதை கட்டப்பட்டுவரும் நிலையில், இரும்புப் பாலம் சரிந்து விபத்துக்குள்ளானது.
அருகிலிருந்த ரயில் பாதைமீது அந்த இரும்புப் பாலம் விழுந்ததால் 25 ரயில் சேவைகள் ரத்துசெய்யப்பட்டன; 15 ரயில் சேவைகள் பகுதியளவு ரத்துசெய்யப்பட்டன.
மேலும் ஆறு ரயில்கள் வேறு வழிகளில் திருப்பிவிடப்பட்டன.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் வத்வா - ரோப்டா சாலை அருகே ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 23) இரவு 10.30 மணியளவில் அவ்விபத்து நேர்ந்தது.
நல்லவேளையாக, இவ்விபத்தால் ஒருவரும் பாதிக்கப்படவில்லை.
தகவல் கிடைத்ததும் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் விபத்து நேர்ந்த இடத்திற்கு விரைந்தனர்.
இவ்விபத்தால் புதிய இருப்புப்பாதைக் கட்டுமானத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில், அதனையொட்டி அமைந்துள்ள தண்டவாளம் சற்று சேதமடைந்துள்ளதால் அதனைச் சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.

