சென்னை: இந்தியப் போக்குவரத்துத் துறையில் மும்பை-அகமதாபாத் இடையேயான புல்லட் ரயில் திட்டம் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என மத்திய தகவல் ஒளிபரப்பு, ரயில்வே துறை இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் போக்குவரத்து, தொழில்நுட்பத் துறைகள் அதிவேகமாக வளர்ச்சி கண்டு வருவதாகச் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
தென்னிந்திய மாநிலங்களில் முக்கியமான நகரங்களை இணைக்கும் வகையில் சென்னை-பெங்களூரு, சென்னை-ஹைதராபாத் ஆகிய வழித்தடங்களிலும் அதிவேக ரயில் திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
இத்திட்டங்கள் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும் என்பதுடன், வணிக, பொருளியல் ரீதியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் அடுத்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் என்றார் அவர்.
உயிரோவியங்கள், கணினி விளையாட்டு, காட்சி உத்திகள் ஆகிய துறைகளில் உலகளாவிய அளவில் பெரும் வேலைவாய்ப்புகள் உருவாகி வருவதாகக் குறிப்பிட்ட அவர், சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இந்திய நகரங்களைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் ஹாலிவுட் திரைப்படங்களுக்கான தொழில்நுட்பப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வருவதாக அமைச்சர் முருகன் குறிப்பிட்டார்.
மின்னிலக்கப் பரிவர்த்தனைகள், புது தொழில் நிறுவனங்கள், நவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் இந்திய இளையர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருவதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

