எரியும் ‘எத்தனால் பெட்ரோல்’ விவகாரம்: எதிர்ப்பைத் தணிக்க இந்திய அரசு முயற்சி

எரியும் ‘எத்தனால் பெட்ரோல்’ விவகாரம்: எதிர்ப்பைத் தணிக்க இந்திய அரசு முயற்சி

2 mins read
7b353bed-5c29-4547-8ae8-010f2184ae2e
உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தையான இந்தியாவில் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு முழுமையான வரவேற்பு கிட்டவில்லை. - கோப்புப் படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் ரசாயனத் திரவத்தைக் கலந்து பயன்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்த கருத்து எரிபொருள் பயனீட்டாளர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதன் மூலம் எழுந்துள்ள எதிர்ப்பைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முயன்றுவருகிறது.

‘இ20’ (E20) என்று அழைக்கப்படும் எத்தனால் கலந்த பொட்ரோலைப் பயன்படுத்துவதை இந்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது.

தூய பெட்ரோலைவிட எத்தனால் பெட்ரோல், குறைந்த ஆற்றல் அடர்த்தியைக் கொண்டுள்ளதால் வாகனங்களின் வேகத்திறனை அது பாதிக்கும் என்ற கருத்து நிலவுகிறது.

அதேபோல, பழைய வாகனங்களின் இயந்திரப் பாகங்கள் எத்தனால் பெட்ரோலால் பாதிப்படையக்கூடும் என்றும் பேசப்படுகிறது.

இத்தகைய காரணங்களால் எத்தனால் பெட்ரோலுக்கு முழுமையான வரவேற்பு இல்லை. இந்நிலையில், கடந்த புதன்கிழமை (ஜூலை 1) மத்திய அரசின் சார்பில் தலைமைச் சட்ட அதிகாரி ஆர் வெங்கடரமணி தெரிவித்த கருத்து இந்த விவகாரத்தைப் பெரிதாக்கி உள்ளது.

‘இ20’ பெட்ரோல் என்பது ஒரு சோதனை முயற்சிதான் என்றும் அதன் விளைவுகள் அடுத்த ஆண்டுதான் தெரிய வரும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் அவர் கூறினார்.

கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவை எதிர்த்து பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது வெங்கட்ரமணி அந்தக் கருத்தை வெளியிட்டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அதனைத் தொடர்ந்து பயனீட்டாளர் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அரசுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையிலான மிக முக்கியமான அரசியல் விவகாரங்களில் ஒன்றாக இது தற்போது மாறியுள்ளது.

எதிர்ப்பைக் கட்டுப்படுத்த அரசாங்கத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வெள்ளிக்கிழமை (ஜூலை 3) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய வெங்கடரமணி, சோதனை முயற்சி என்று எத்தனால் விநியோக அளவையைத் தாம் குறிப்பிட்டதாகவும் எத்தனால் பெட்ரோல் கொள்கையைக் குறிப்பிடவில்லை என்றும் கூறினார்.

ஆனால், நீதிமன்ற விசாரணை தொடர்பான காணொளிக் காட்சிகளில் எத்தனால் பெட்ரோல் பற்றி வெங்கடரமணி பயன்படுத்திய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அது தற்போது சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ஆனால், அவரது அந்த விளக்கம் பொதுமக்களின் ஆத்திரத்தைத் தணிக்க உதவவில்லை. இந்நிலையில், எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கும் விமர்சனங்களை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் என மத்திய அரசாங்கத்தின் பத்திரிகைப் பிரிவு மறுத்துள்ளது.

ஆத்திரத்தைத் தூண்டும் இந்த வலையில் பொதுமக்கள் சிக்கவேண்டாம் என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
எரிபொருள்பெட்ரோல்மத்திய அரசு