தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பேருந்து - கார் மோதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஐவர் உயிரிழப்பு

1 mins read
704216d7-8043-469c-9ba9-8b34efd117a6
முற்றிலும் சேதமடைந்த காரைச் சோதனையிடும் காவல்துறை அதிகாரிகள். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

ஆலப்புழா: சாலையில் விரைந்து சென்ற கார், அரசுப் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரிலிருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஐவர் உயிரிழந்தனர்; மேலும் அறுவர் படுகாயமுற்றனர்.

இவ்விபத்து இந்தியாவின் கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் திங்கட்கிழமை (டிசம்பர் 2) இரவு 9 மணியளவில் நேர்ந்தது.

மோதிய வேகத்தில் கார் முற்றிலுமாக உருக்குலைந்ததையும் பேருந்தின் முன்பக்கம் சேதமுற்றதையும் படங்கள் காட்டியதாக ‘என்டிடிவி’ செய்தி தெரிவித்தது.

சிதைந்த காரை வெட்டியே உள்ளிருந்த மாணவர்களை மீட்க முடிந்ததாகக் கூறப்பட்டது.

காயமுற்ற மாணவர்கள் இருவரும் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அம்மாணவர்கள் எழுவரும் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள வந்தனம் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவக் கல்வி பயின்று வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்தில் சிக்கிய பேருந்து குருவாயூரிலிருந்து காயாங்குளம் நோக்கிச் சென்றுகொண்டிருந்ததாகவும் அதிலிருந்த பயணிகளில் 15 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது.

முதலில் வாகனம் ஒன்றை முந்திச் சென்ற கார், பின்னர் பிரேக்கை அழுத்தியதால் சாலையில் வழுக்கிச் சென்று பேருந்துமீது மோதியது என்று உள்ளூர்வாசிகள் கூறியதாக ‘ஐஏஎன்எஸ்’ செய்தி தெரிவித்தது.

இதனிடையே, காரில் அளவிற்கதிகமாக 11 பேர் சென்றதாகவும் அத்துடன் பெருமழை பெய்ததாலும் விபத்து நேர்ந்திருக்கலாம் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கூறியதாக ‘மனோரமா’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்