லக்னோ: இந்தியத் தலைநகர் புதுடெல்லியிலிருந்து உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கோண்டாவுக்கு சனிக்கிழமை(அக்டோபர் 25) இரவு புறப்பட்டுச் சென்ற சொகுசுப் பேருந்து தீயில் கருகியது.
உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோ வழியாக அந்தப் பேருந்து சென்றது. இரண்டு அடுக்குப் படுக்கை வசதி கொண்ட அந்தச் சொகுசுப் பேருந்தில் 70 பயணிகள் இருந்தனர்.
ஆக்ரா - லக்னோ தேசிய விரைவுச்சாலையில் ரேவ்ரி பகுதியில் உள்ள சுங்கச் சாவடி அருகே ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 26) அதிகாலை பேருந்து சென்றபோது திடீரென தீப்பிடித்துக்கொண்டது.
உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், பயணிகள் அனைவரையும் எழுப்பி அவசர அவசரமாக வெளியேற்றினார்.
அதற்குள் பேருந்து முழுவதும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. அதிர்ஷ்டவசமாக 70 பயணிகளும் உயிர்த்தப்பினர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்தச் சம்பவம் ரேவ்ரி சுங்கச்சாவடிக்கு முன்பு 500 மீட்டர் தூரத்துக்குள் நடந்துள்ளது.
‘‘தகவல் அறிந்து தீயணைப்பாளர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் பயணிகளைப் பத்திரமாக வெளியேற்றினர்,’’ என்று உத்தரப் பிரதேச அதிகாரிகள் கூறினர்.
‘‘பேருந்தின் சக்கரம் ஒன்று தீப்பிடித்துக்கொண்டது. அதைப் பார்த்த ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீயை அணைத்த பிறகு நெடுஞ்சாலையிலிருந்து பேருந்து அகற்றப்பட்டது. அதையடுத்து, போக்குவரத்து வழக்கநிலைக்குத் திரும்பியது’’ என்று உத்தரப் பிரதேசக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆந்திராவில் இரண்டு நாள்களுக்கு முன்பு சொகுசுப் பேருந்து தீப்பற்றி எரிந்து 20 பயணிகள் உயிரிழந்த நிலையில், இந்தச் சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


